இலங்கையில் விநியோகம் செய்ய கொண்டுவரப்பட்டு, அனுமதி மறுக்கப்பட்டுள்ள சவூதி அரேபிய அல்குர்ஆன் பதிப்புகள் தொடர்பில் மீளாய்வுகள் செய்யப்பட வேண்டும்!
ஸவூதி அரேபியா மதீன மாநகரில் அமைந்துள்ள மன்னர் பஹத் அல்குர்ஆன் பதிப்பகத் தொகுதி 1984 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
தற்போது வருடத்திற்கு 20 மில்லியன் அல்குர்ஆன் பிரதிகளை வெளியிடும் ஆற்றலை அது கொண்டுள்ளது, இதுவரை சுமார் 400 மில்லியன் பிரதிகளை அது வெளியிட்டுள்ளது.
அத்தோடு இதுவரை 77 உலகலாவிய மொழிகளில் அல்குர்ஆன் பொருள் விளக்க மொழிபெயர்ப்புக்கள் (தர்ஜூமா) செய்யப்பட்டு ஹஜ் உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் அங்கு தொழிலுக்காக வருவோர் என சகலருக்கும் இலவசமாக தருவதோடு உலக அளவில் விநியோகிக்கப்பட்டும் வருகிறது.
அந்த தொகுதியில் சுமார் 1750 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
அல்குர்ஆன் மற்றும் தர்ஜமா அச்சுப் பிரதிகள் மாத்திரமன்றி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியுமான மென் பிரதிகள், ஒலிப்பதிவுகள் என பல்வேறு சேவைகள் இடம் பெறுகின்றன.
உண்மையில் அல்குர்ஆன் பொருள் விளக்க மொழியாக்கங்களை மாத்திரம் வாசித்து அதனை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என்பதனால் அதற்கான தப்ஸீர் விளக்கங்களையும், வியாக்கியானங்களையும் நாம் அறிந்து கொள்வதில் கற்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.
இன்று தாராளமாக தப்ஸீர் நூல்களும் உலக மொழிகளில் வெளிவந்து கொண்டிருப்பது போல் அல்குர்ஆன் கலைகள் தொடர்பில் நூல்களும் வெளிவருகின்றன.
அதேபோன்று அல்குர்ஆன் அல்ஸூன்னா இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய ஷரீஆ தொடர்பில் எழுப்பப்படுகின்ற சர்ச்சைகள் சந்தேகங்கள், பிரயோக விளக்கங்களும் தாராளமாகவே இஸ்லாமிய அறிஞர்களால் நிறுவனங்களால் அமைப்புக்களால் வெளியிடப்பட்டும் உள்ளன.
அந்த வகையில் ஸவூதி அரேபிய மன்னர் பஹத் அல்குர்ஆன் அச்சகத் தொகுதி வெளியீடுகளை இலங்கைக்கு தருவிப்பதில் அநாவசியமான நிபந்தனைகளை முஸ்லிம் விவகாரத் திணைக்களம் அல்லது நிபுணர் குழுக்களோ விதிப்பது அறிவுடைமை ஆகாது.
இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்கோ பாதுகாப்பிற்கோ அமைதி சமாதானத்திற்கோ சகவாழ்விற்கோ அவை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததும் இல்லை, இருக்கப் போவதில்லை.
அவ்வாறு ஏதேனும் விஷேட கரிசனைகள் இருப்பின் அவை குறித்த பின் இணைப்புகளுடன் அவற்றை இலங்கையில் விநியோகிக்க ஏற்பாடுகளை செய்தல் ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.
துறைசார் நிபுணத்துவ குழுக்களில் உலமாக்கள் இருப்பினும் அவ்வாறான பாரதூரமான விடயங்களில் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, தேசிய ஷூரா சபை, சட்ட நிபுணர்கள், அரசியல் தலைமைகள் மற்றும் இராஜதந்திரிகளது கவனமும் ஈர்க்கப்படல் வேண்டும்.
இல்லாத பட்சத்தில் அரசும், அரச நிறுவனங்களும், துறைசார் அமைச்சர்கள் அதிகாரிகளும் பிழையாக வழிநடத்தப்பட இடமிருக்கிறது.
அதேபோல் சமூகத்திற்கும் அதன் சன்மார்க்க சிவில் அரசியல் தலைமைகளிற்கும், தேசத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுவதோடு அறபு முஸ்லிம் உலகுடனான இருதரப்பு பல்தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட இடமிருக்கிறது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்தல் வேண்டும்.
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 30.07.2024
ஸவூதி அரேபியா ஜித்தா நகரிற்கான முன்னாள் கொன்ஸல் ஜெனரல்.
முன்னாள் பொதுச் செயலாளர்- தேசிய ஷூரா சபை.