ஒலிபெருக்கியின் சத்தம் மற்றும் பிற நடவடிக்கைகளினூடாக பிறருக்கு இடையூறின்றி நடந்து கொள்வோம் ; ஜம்இய்யத்துல் உலமா

புனிதம் மிகு ரமழான் மாதத்தில் தற்போது நாம் இருக்கிறோம். நாம் அதிகமாக நற்செயல்கள், வணக்கங்களை செய்து வரும் இச்சமயத்தில் எமது செயற்பாடுகளாலும் நடவடிக்கைகளாலும் பிறருக்கு எந்தவித இடையூறும் தொந்தரவுகளும் ஏற்படாத வகையில் நடந்துகொள்வது நம் மீது கடமையாகும்.
இஸ்லாம், எம்மால் பிறருக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
தராவீஹ் தொழுகை, இப்தார் நிகழ்ச்சிகள், பயான் நிகழ்ச்சிகள் போன்றவை ரமழான் மாதத்தில் நடைபெறுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளாகும். இதன் மூலம் எமது சமூகம் பல்வேறு பயன்களைப் பெறுவது யாராலும் மறுக்க முடியாது.
ஆயினும், இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஒலிபெருக்கியின் சத்தம் அளவுக்கு அதிகமாக உயர் நிலையில் வைப்பதனால் சுற்றுப்புறத்திலுள்ள சிறுவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் போன்றோருக்கு பெரும் தொந்தரவாக மாறுகிறது.
அதேபோல்,
* வீடுகள் மற்றும் கடைகளில் வானொலி சத்தங்களை அதிகரித்து வைத்தல்
* வாகனங்களை ஒழுங்கின்றி நிறுத்துதல்,
* பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும்வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்தல்,
* காரியாலயங்கள் மற்றும் வியாபார தலங்களிலிருந்து இறுதி நேரத்தில் வெளியேறி, இஃப்தாருக்கு வீடு செல்லும் நோக்கில் அதிகவேகமாக வாகனங்களை செலுத்துதல்
போன்ற செயல்களால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுண்டு.
எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் தமது மார்க்க வழிகாட்டுதலின்படி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். எனினும், அந்த சுதந்திரம் தமது சமூகத்தினருக்கோ பிற சமூகத்தினருக்கோ இடையூறாக அமையக்கூடாது. அதே சமயம், நாட்டின் சட்டங்களுக்கு முரணாகவும் இருக்கக் கூடாது.
எனவே, ஒலிபெருக்கியின் சத்தத்தை தேவைக்கு அதிகமாக அதிகரிப்பதை தவிர்ப்பதுடன் ஒவ்வொரு மஸ்ஜிதும் தமது பிரதேசத்தின் நிலைமைகளை கருத்தில் கொண்டு பிறருக்கு இடையூறு ஏற்படாமல் செயல்பட வேண்டும் என அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் பொதுமக்களையும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அன்புடன் வேண்டிக்கொள்கிறது.
முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
https://www.acju.lk/news-ta/acju-news-ta/3627-acju-stmnt-loud

