News

பாலஸ்தீன மக்களின் விடுதலை ,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையாகும் ; சுவஸ்திகா அருளிங்கம்

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும்,ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது என சட்டத்தரணியும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமா சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக சுதந்திர பலஸ்தீன இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

யுத்த நிறுத்த உடன்பாட்டினை மீறி இஸ்ரேல் மீண்டும் தனது இனப்படுகொலையை ஆரம்பித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,இஸ்ரேலின் வன்முறையையும் காசாவிற்கு எதிரான கூட்டு தண்டனையை நிறுத்தக்கோரியும்,இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கு அமெரிக்கா நிதி வழங்குவது மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதை அம்பலப்படுத்தும் நோக்கத்துடனும்,இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுவஸ்திகா அருளிங்கம் மேலும் தெரிவித்ததாவது.

பலஸ்தீனிய தேசத்திற்கும் மக்களிற்கும் ஆதரவாகவும் நாங்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

அதற்கு காரணம், போர் நிறுத்த உடன்படிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த பயங்கரவாத இஸ்ரேலிய அரசு,பலஸ்தீனிய மக்கள் மீதும் நாட்டின் மீதும் இன்னமும் வன்முறையையும்,இன ஒழிப்பையும் நடத்திக்கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே அதனை கண்டிப்பதற்கும் மேலும் மேலும் பலஸ்தீனிய மக்கள் மீது வன்முறையை செலுத்தவேண்டாம் எனவும் போரை நிறுத்தவேண்டும் எனவும்,பாலஸ்தீன மக்களிற்கு உரித்தான நிலங்களை விடுவிக்குமாறும்,கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும்,ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது.

அதனால்தான் பாலஸ்தீன நாட்டு மக்களிற்கு எதிராக நடத்தப்படுகின்ற,இனக்குற்றங்களிற்கு எதிராகவும், போர்குற்றங்களிற்கு எதிராகவும், கைதுகளிற்கு எதிராகவும்,அவர்களுடைய காணிகளை கைப்பற்றுவதற்கு எதிராகவும் நாங்கள் இன்று இலங்கையிலிருந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். இஸ்ரேலிற்கும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற, முற்றுமுழுதாக உதவிகளை செய்துகொண்டிருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிராகவும்,இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

Recent Articles

Back to top button