News

அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உயர் பதவிகள் ; பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என்கிறார் சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த

குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும் என்று கூறியவர்கள் தற்போது, அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களையே முக்கிய பதவிகளுக்கு நியமித்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை விரைவில் வெளிப்படுத்துவோமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மேலதிக வகுப்பெடுப்பதாகக் கூறியவர்களின் ஆட்சியில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டுக்கள் அதிகரித்துச் செல்கின்றன. தேசிய பாதுகாப்பு பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சரணடையும் வரை அவரை கைது செய்ய முடியாது போனது. தேசபந்து மற்றும் செவ்வந்தியை உரிய நேரத்தில் கைது செய்து முன்னிலைப்படுத்துவதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறிய போதிலும், அவர்களால் இறுதிவரை அவர்கள் இருக்குமிடம் கண்டு பிடிக்கப்படவில்லை.

தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து விடயங்களுக்கும் முரணான விடயங்களையே இன்று அரசாங்கம் செய்து வருகிறது. அதேவேளை வெட்கமின்றி நாம் அவ்வாறு கூறவில்லை என்றும் ஒவ்வொன்றுக்கும் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை முட்டாள்கள் என அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கிறது.

குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும் என்று கூறியவர்கள் இன்று, அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களையே முக்கிய பதவிகளுக்கு நியமித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை விரைவில் வெளிப்படுத்துவோம். ஏப்ரல் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு அரசாங்கத்தின் பொய்களை அறிந்து கொள்ளலாம்.

அரச சேவையிலுள்ள பிரதான அதிகாரிகளுடன் அரசாங்கம் மோதுவதால் அரச சேவை கட்டமைப்பு சீர்குழைந்துள்ளது. அரசாங்கம் பொலிஸ் ஆணைக்குழுவுடன் முரண்படுவதால் தான் தேசிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகளைக் கூட அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.

Recent Articles

Back to top button