இஸ்ரேலின் ஷபாத் இல்லத்தை மூடுவதற்கு பொத்துவில் பிரதேச சபை தீர்மானத்தை நிறைவேற்றினால், அது குறித்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என அமைச்சர் விஜித ஹேரத் உறுதியளிப்பு

வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களை, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் இன்று (11) மாலை சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, அம்பாறை மாவட்டம் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் செயல்படும் சபாத் இல்லம் (Sabbath House) மற்றும் அப்பகுதியில் உள்ள பிற விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சந்திப்புக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மௌலவி முஹம்மத் மிப்லால், சபாத் இல்லத்தின் சட்டரீதியான அனுமதி குறித்தும், அதை நிரந்தரமாக மூடுவது குறித்தும் அமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார்.
சபாத் இல்லத்தை மூடுவதற்கு பொத்துவில் பிரதேச சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், அது குறித்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் வாகன தரிப்பிடம் குறித்தும் அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. இந்த வாகன தரிப்பிடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்ததாக மௌலவி மிப்லால் தெரிவித்தார்.
அத்துடன், பொத்துவில் பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், அதன் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் உள்ளார் என்பதையும் அமைச்சருக்குத் தெரிவித்ததாக மௌலவி மிப்லால் கூறினார்.
செய்தி சேகரிப்பாளர் – நூருல் ஹுதா உமர்



