News

பாதிக்கப்பட்டோரை படமெடுத்து பகிரும் குறைமதியுடையோர் கவனத்திற்கு!

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், ஏழை பணக்காரன், கற்றவன் கல்லாதவன் என்பதற்கு அப்பால் அவர்தம் உயிர்களை விட மேலான சுய கெளரவம் இருக்கிறது.

இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மனிதனின் உயிர் உடைமை என்பவற்றிற்கு எவ்வாறு உத்தரவாதங்கள் தரப்படுகின்றனவோ அதே உத்தரவாதம் அவனது சுய கெளரவத்திற்கும், தன்மானத்திற்கும் தரப்படுகிறது.

எவ்வாறு உயிர் உடைமைகளை தீண்டுவது பெரும் பாவமாக ஹராமாக்கப் பட்டுள்ளதோ அதே போன்றே ஒருவரது தன்மானத்திற்கு சுய கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதும் ஒருவரது உணர்வுகளை காயப்படுத்துவதும், நோவினை செய்வதும் தடுக்கப்பட்ட விடயங்களாகும்.
பொதுவாகவே ஸதகா, ஸகாத் தான தர்மங்கள் செய்யுமிடத்து பிறரிடம் தமது தேவைகளை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல விரும்பாத, கைநீட்டி யாசகம் கேட்க விரும்பாத மனிதர்கள் பற்றி (அல்குர்ஆன் அல்ஸுன்னா) இஸ்லாம் எமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
அவ்வாறனவர்களது சூழ்நிலைகள், முகபாவங்களை கவனமாக அவதானித்து அவர்களது சுய கெளரவத்திற்கு பங்கம் இல்லாத வகையில் இரகசியமாக கைகொடுத்து உதவுமாறு இஸ்லாம் கற்றுத் தருகிறது.

அதிலும் குறிப்பாக, இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளால் விளையும் அனர்த்தங்களின் போது  அனாதரவாக நிர்க்கதி நிலைகளுக்கு ஆளாகும் மனிதர்கள் தமது உறவுகளின் உயிர்களை, தமது உடைமைகளை இழந்து தவிக்கின்ற இக்கட்டான தருணங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோர் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் புகைப்படங்களை எடுப்பதுவும், வீடியோக்களை எடுப்பதும் அவற்றை ஊடகங்களில் சமூக ஊடகங்களில் தணிக்கை நடைமுறைகளுக்கு அப்பால் பதிவிடுவதும் பகிர்வதும் ஹராமான தடுக்கப்பட்ட செயல்களாகும்.

நன்மையை ஏவி தீமையை தடுக்கின்ற உயர் பணி செய்யக் கடமைப்பட்டுள்ள ஒவ்வொரு விசுவாசியும் அறிவிலிகளின் இவ்வாறான ஈனச் செயல்களை தடுத்து நிறுத்தவும், ஆட்சேபனை தெரிவிக்கவும் தயங்கக் கூடாது.

இதய சுத்தியுடன் அல்லாஹ்விற்காக மனிதநேயப் பணிகளில் ஈடுபடும் தனியாட்கள், அமைப்புகள் தவிர்த்து பல சமூக ஊடக விளம்பர பரோபகாரிகள், ஒருசில என்ஜீஓ வியாபாரிகள் தமது வீடியோ கெமராக்களை புகைப்படக் கருவிகளை சுமந்து கொண்டு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது  இரை வைத்து வேட்டையாட துப்பாக்கிகளால் குறிவைப்பது போல் தான் தெரிகிறது.

அவர்கள் நேற்று இவர்களை விடவும் சிறந்த நிலையில் வாழ்ந்தவர்கள், தமது சொந்த உழைப்பில் இருந்து தயாள உணர்வுடன் தாராளமாக வாரி வழங்கியவர்கள், தர்ம நிதிகளில் தங்கி வாழ்ந்தவர்களுமல்லர், இன்ஷா அல்லாஹ் நாளை அவர்களது நிலை இருந்ததை விட சிறப்பாக அமைந்து விடவும் கூடும், அல்லாஹ்வின் நாட்டப்படி  சகலருக்குமான ஒரு சோதனைக்கு நேரடியாக முகம் கொடுப்பவர்கள், அவர்களுக்கு இறைவனிடம் உயர்ந்த இடம் கண்ணியம் இருக்கிறது, அவர்களில் உயிர் நீத்தவர்கள் ஷஹாதத் அந்தஸ்தை பெறுகிறார்கள்.

இன்று அவர்கள், நாளை யார் எவர் எங்கு எப்படி சோதனைகளுக்கு ஆளாக்கப்படுவர் என்பதனை எவரும் அறிய மாட்டோம், இது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை விடவும் பாதிக்கப்படாதவர்களுக்கு இரட்டிப்பான சோதனையாகும் என்பதனை ஒவ்வொரு ஆன்மாவும் மனதில் கொள்ள வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் உதவி வழங்கும் உள்நாட்டு பிறநாட்டு நிறுவனங்கள் அல்லது தனியாட்கள் ஆவணப்படுத்தல் தேவைகளுக்காக எடுக்கும் படங்கள் வீடீயோக்கள் மேற்படி அடிப்படை மனித விழுமியங்களை பாதிக்காத வண்ணம்  பயனாளிகளின் அனுமதியுடன் தணிக்கை நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே போன்று அநர்த்தங்களால் காயப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், அல்லது உயிருக்காக போராடுபவர்களை முந்திக் கொண்டு எவ்வித ஊடக தர்மங்களையும் தணிக்கை நடைமுறைகளையும் கடைப்பிடிக்காது யூடீயூப் டிகடாக் சில்லறை உழைப்புகளுக்காக பதிவிட்டு பகிர்வதும் அவற்றால் உழைப்பதும் தடுக்கப்பட்ட ஹராமான கேவலமான உழைப்பு ஆகும்.

அவர்கள் எமது தாய் தந்தையர், எமது உடன் பிறப்புகள், எமது உற்றார் உறவினர் என்ற உணர்வில் அவர்களது உயிர் உடமைகள் விடயத்திலும் தன்மானம் சுய கெளரவம் போன்ற உணர்வுபூர்வமான அம்சங்களிலும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த அனர்த்த நிலையில் இருந்து ஒரு தேச மக்களாக நாம் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பவும் எமது வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பவும் துணைபுரிவானாக!

அனர்த்த நிவாரண பணிகளில் இக்லாஸ் இதய சுத்தியுடன் ஈடுபடும் அனைத்து உறவுகளுக்கும் அவர்தம் கூட்டம் குடும்பங்களுக்கும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் வளமான வாழ்வாதாரத்தையும் இம்மை மறுமை பேறுகளையும் நிறைவாகத் தருவானாக!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 04.12.2025

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button