அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும்
வேலைகளை ஜனவரி முதல் ஆரம்பிக்க வேண்டும்; ரணில்

கொழும்பில் கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக சண்டே டைம்ஸ் (Sunday Times) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு கட்சிகளும் ஒன்றிணைவதற்கு வழிவிடும் வகையில், கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக உள்ளீர்களா என ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் பிரதிநிதி ஒருவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அத்தகையதொரு ஒற்றுமைக்குத் தான் தடையாக இருந்தால், கட்சித் தலைமையிலிருந்து விலகத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவது ஏற்கனவே தாமதமாகிவிட்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கூறிய முன்னாள் ஜனாதிபதி, அதற்கான பணிகளை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



