கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அத்தியாவசியமானது ; ஜனாதிபதி

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதிக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நடைமுறைப்படுத்தியுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களையும் அதன் அவசியத்தையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும், 06 ஆம் தர பாடத்திட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவனம், கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் கல்வித் துறையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் இப்பணிகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் இதன்போது முன்மொழிந்தனர்.
கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவிசுவாசத்துடன் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, புதிய கல்விச் சீர்திருத்தங்களில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறை குறித்து இங்கு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கிய ஜனாதிபதி, முதலாம் தரத்திற்கான சீர்திருத்தப் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும், எனினும் கற்பித்தல் தொகுதிகளை (Modules) தயாரிப்பதில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சிகளில் நிலவும் தாமதம் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தவிர்த்து, 06 ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஸ்மார்ட் பலகைகள் (Smart Boards), தொலைக்காட்சிகள் மற்றும் கணினிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றோர்களின் பணத்தில் அன்றி, அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான ஆசிரியர் இடமாற்றங்கள், பதவியுயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இலங்கை பிரிவெனா ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் வகமுல்லே உதித தேரர், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலஹப்பெரும, கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.பி.எல். லால் குமார, அதிபர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிற ராஜபக்ஷ உள்ளிட்ட பல ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேலும், தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.


