முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில்திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல் உட்பட முக்கிய முன்மொழிவுகள் உள்ளடங்கிய தனிநபர் பிரேரணைகளை புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார்.
இந்த தனிநபர் பிரேரணைகளை வியாழக்கிழமை (05) அன்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் அவர் கையளித்தார்.
இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையில், ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல்,முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண்கள் காதிகளாகப் பணியாற்றுவதற்கான தடையை நீக்கல் மற்றும் காதிகள் அனைவரும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற முக்கிய முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.



