News

பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது

பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று இன்று (8) குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் போது, மாறுவேடத்தில் சென்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்யத் தயாரான சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபரான மருத்துவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றிவளைப்பின் போது, கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான மருந்து வகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர் முன்னாள் வைத்திய அதிகாரி எனவும், அவர் ஒரு கருக்கலைப்புக்காக 45,000 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான பணத்தை அறவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதைத் தொடர்ந்து, குறித்த வைத்தியரின் உதவியாளர் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைதைத் தவிர்ப்பதற்காக எந்தவொரு தொகையையும் வழங்குவதாகக் கூறி, சந்தேகநபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button