News

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் உரையாற்றவுள்ள நாமலுக்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு ..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பிப்ரவரி 25ஆம் திகதி பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்டு (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge Union) ஆகிய மாணவர் சங்கங்களில் உரையாற்றவுள்ளமைக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (TYO UK) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது முக்கிய கோரிக்கைகள் சில வருமாறு:

• நாமக்கல் ராஜபக்சவின் உரையை உடனடியாக ரத்து செய்தல்.

• இந்த அழைப்பின் மூலம் பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்புக்காக ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

• யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நபர்களுக்கு மேடை வழங்காத கொள்கையை (Non-platforming policy) பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஆள் கடத்தல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தப்பிக்க முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அந்த “இனப்படுகொலை இயந்திரத்தின்” வாரிசு மற்றும் பாதுகாவலர் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், சட்டப் பரீட்சை மோசடிகள் மற்றும் 70 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், இவ்வாறான ஒருவருக்கு உலகத்தரம் வாய்ந்த புகழ்பெற்ற மேடையை வழங்குவது நீதியை நிலைநாட்டும் செயல்முறைக்கு விடுக்கப்படும் சவாலாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

தமது மக்களின் வேதனையை அரசியல் உரையாடல்களுக்கான கருவியாகப் பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள இந்த அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினரின் வருகைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.

Recent Articles

Back to top button