மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் யுத்த மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் – அனைவரும் போரை நிறுத்திவிட்டு, உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்என மேலும் தெரிவிப்பு

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளதுடன், இந்த மோதலானது உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளார்.
X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மூலம் மோதல் விரிவடைவதை பிரேமதாச கண்டித்துள்ளார்.
அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, தாமதமின்றி அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மத்திய கிழக்கில் நிலவும் ஆக்கிரமிப்பு மற்றும் மோதல்கள் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாகும். சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்கள் மூலம் மோதல் களம் விரிவடைவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். போரை நிறுத்திவிட்டு, உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். மத்திய கிழக்கில் பணிபுரியும் 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களின் உயிர்கள் மிக முக்கியமானவை. எந்த விலை கொடுத்தாவது போர் தவிர்க்கப்பட வேண்டும். அமைதிக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள்,” என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ள பிரேமதாச, அவர்களின் உயிர்கள் மிக முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ளார்.



