டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளின் அரச அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த அவர், சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணாக, தனது விருப்பத்திற்கேற்ப உலக அரசியலைக் கையாள முற்படுவது இலங்கை போன்ற நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பாரிய பிரச்சினையாகும் எனச் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே போன்ற நாடுகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக ரணில் விக்ரமසිங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரானில் நிலவும் யுத்தச் சூழல் காரணமாக இலங்கைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரடி அபாயம் இல்லை என்றும் அவர் கூறினார். ஈரானின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும், ஏனைய நாடுகளின் ஊடாக உலக சந்தைக்குத் தேவையான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அந்த கடல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி விநியோக வலையமைப்பை முடக்கினால், அது பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என ரணில் விக்ரமசிங்க கூறினார்.
தற்போது அத்தகைய நிலைமை பதிவாகவில்லை என்றாலும், கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டால் அது இலங்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை இல்லாது செய்யவே முயற்சித்தார். எப்படியாவது ஒரு அரசாங்கத்தை நீக்குவதென்றால், இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளின்படி பொருத்தமற்றது என சுவிட்சர்லாந்தும் நோர்வேயும் கூறுகின்றன. ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு விருப்பமான முறையில் உலக விவகாரங்களை முன்னெடுத்துச் செல்லப் பார்க்கிறார். ஆனால் இது எமக்கு நல்லதல்ல. இது மிகவும் ஆழமான ஒரு பிரச்சினை.”



