News

ட்ரோன் தாக்குதல் அபாயம் குறித்து பொலிஸார் எச்சரிக்கை..

ட்ரோன் (Drone) விமானங்களைப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் பயங்கරவாதத் தாக்குதல்களை நடாத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய நிலைமைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயத் தேவை என இலங்கை பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ட்ரோன் விமானங்கள் / ஆளில்லா விமானங்கள் இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் இயக்குதல் போன்ற செயற்பாடுகள் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். இருப்பினும், சில நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த விமானங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதுடன், அவற்றின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதற்கமைய, ட்ரோன் விமானங்கள் / ஆளில்லா விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், இலங்கையில் ட்ரோன் விமானங்களை விற்பனை செய்யும் வணிக நிலையங்கள் மற்றும் பழுதுபார்க்கும் நிலையங்களை நடாத்திச் செல்லும் நபர்கள், 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனரா என்பது குறித்து அவதானம் செலுத்துமாறும், இது தொடர்பான தரவுகளைப் பேணுமாறும் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button