ஈரான் வரலாற்றில் மிகக் கடுமையான தாக்குதல் இன்று நடத்தப்படும் – அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் 10-வது நாளைக் குறிக்கும் வகையில், ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த தாக்குதல்கள் இன்று (10) முன்னெடுக்கப்படும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்போது போரினால் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.
இன்றைய தினத்தில் அதிகளவிலான போர் விமானங்கள் மற்றும் குண்டுகளைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கையின் மூன்று முக்கிய இராணுவ இலக்குகள் இருப்பதாகவும், அவை ஈரானின் ஏவுகணை களஞ்சியங்களை அழித்தல், அவர்களின் கடற்படையை முடக்குதல் மற்றும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நிரந்தரமாக இல்லாது செய்தல் என்பனவாகும் என ஹெக்செத் மேலும் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் ஏவிய ஏவுகணைகளின் அளவு அவர்களின் அதிகபட்ச கொள்ளளவை விட மிகக் குறைவாக இருந்ததாகவும், இது அவர்களின் சக்தி பலவீனமடைந்துள்ளதற்கான சான்று எனவும் அமெரிக்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எவ்வாறாயினும், அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளின் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களை பாதுகாப்புச் செயலாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி ஊடாக உலக சந்தைக்கு மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்துக்களுக்கு ஈரான் இடையூறு விளைவித்தால், இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட இருபது (20) மடங்கு பெரிய தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்டுள்ளார். ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அழிக்கப்படும் வேகத்தைப் பார்க்கும்போது, இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அதிபர் எதிர்வு கூறியுள்ளார்.
ஈரானின் முன்னாள் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ட்ரம்ப், மொஜ்தபா கமேனி அமைதியான முறையில் செயற்படுவார் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.



