“எனக்கு எண்ணெய் கிணறுகள் இல்லை.. விலையை அதிகரித்தது நான் லாபம் ஈட்டுவதற்காக அல்ல” – ஜனாதிபதி

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், எரிசக்தி விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்ததே தவிர, அரசாங்கமோ அல்லது தானோ லாபம் ஈட்டும் நோக்கத்தில் அல்ல என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்ததாக திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
தான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல என்றும், விலையை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட லாபம் அடையும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் இந்த எரிசக்தி விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் எரிசக்தி விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.
மார்ச் மாத தொடக்கத்தில் 70 டொலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 100 டொலர் வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகப் பாதைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் டெண்டர்கள் ரத்து செய்யப்படுதல் போன்ற காரணங்களால் எண்ணெய் சந்தை கடும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு நிலவிய நெருக்கடியை விட தற்போதைய நிலைமை மாறுபட்டது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போது இலங்கையிடம் 7.2 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார். எனவே, எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாமை என்ற பிரச்சினை தற்போது எழவில்லை என்றும், ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளினாலேயே நிகழும் என்றும் அவர் விளக்கினார்.
எரிபொருள் விலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களின் போது கூட, மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டு எரிபொருளை சேமித்து வைக்க முற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். உதாரணமாக, மார்ச் 1ஆம் திகதி 4,500 கிலோலீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதியாகும் போது 10,500 கிலோலீட்டராக அதிகரித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலைமைகளை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின், மக்கள் தமது நுகர்வு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து நிதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மேலதிகமாக வேண்டுகோள் விடுத்தார்.



