ஹோர்முஸ் ஜலசந்தியில் கடும் பதற்றம்: ஈரான் கண்ணிவெடிகளை புதைக்கிறது – அமெரிக்கா தாக்குதல்

உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரான் கடற்படை கண்ணிவெடிகளைப் புதைக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஈரானிய கடற்படைக் கப்பல்கள் சிலவற்றை அழித்துள்ளது.
ஈரான் கடந்த சில நாட்களில் ஜலசந்தியில் பல கண்ணிவெடிகளைப் புதைத்துள்ளதாகவும், இன்னும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளைப் புதைக்கும் திறன் அவர்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) விடுத்துள்ள அறிக்கையின்படி, ஈரானின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் உட்பட 16 கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன.
உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் இப்பகுதி முடக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 80 முதல் 90 டொலர்கள் வரை வேகமாக மாறி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் போர்ச் சூழலால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்பதால், அதிகாரிகள் இதனை “மரணப் பள்ளத்தாக்கு” (Valley of Death) என்று அழைக்கின்றனர்.
ஈரானிய புரட்சிகர இராணுவம் (IRGC) இந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.
குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு சுமார் 15 மில்லியன் பீப்பாய்கள் தற்போது இப்பகுதியில் முடங்கிக்கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த G7 நாடுகள் தமது எண்ணெய் கையிருப்புகளை சந்தைக்கு வெளியிடப் பரிசீலித்து வருகின்றன.
ஈரான் உடனடியாக இந்தக் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



