நாட்டில் தங்கியிருக்கும் இஸ்ரவேலர்களுக்கு விஷேட பாதுகாப்பு ..

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் பிரதான சுற்றுலா வலயங்களின் பாதுகாப்பை உச்சகட்டமாகப் பேணுவதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பாக, ஆருகம்பை (Arugam Bay) பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்த மட்டத்தில் இருந்தபோதிலும், அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து தீவின் பிரதான சுற்றுலா வலயங்களை உள்ளடக்கிய வகையில் 24 மணி நேரமும் செயற்படும் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது கிழக்குக் கடலோரப் பகுதியில் சுற்றுலாத்துறைக்கு விடுமுறைக் காலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படுகிறது. தற்போதைய நிலையில் ஆருகம்பை பகுதியில் சுமார் 40 முதல் 50 வரையான இஸ்ரேலிய பிரஜைகளே தங்கியுள்ளனர்.
யூத சுற்றுலாப் பயணிகளுக்காக மத மற்றும் சமூக சேவைகளை வழங்கும் ‘சபாத்’ (Chabad) இல்லங்கள் இலங்கையில் அமைந்துள்ளதால், இஸ்ரேலியப் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆருகம்பை பகுதியில் அமைந்துள்ள சபாத் இல்லம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நிலைமை பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக நிர்வகிக்க உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாதுகாப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நாட்டுக்கு வருகை தரும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அதிகபட்ச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும் என அந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் வலியுறுத்தினார்.



