News

ஐந்து எண்ணெய் கிணறுகள் உள்ளன.. விரைவில் அகழ்ந்தெடுக்கப்படும்.. அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை !

இலங்கையில் ஐந்து எண்ணெய் மற்றும் எரிவாயு படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று அல்லது நான்கு படிவுகளில் கணிசமான அளவு எரிபொருள் இருப்பது தரவு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியுடன் (ITN) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தரவு ஆய்வுகள் மூலம் இந்த படிவுகளில் எண்ணெய் இருப்பது ஏற்கனவே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

“இப்போதுள்ள பிரச்சினை எண்ணெய் இருக்கிறதா இல்லையா என்பது அல்ல. எண்ணெய் இருப்பது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது எமது முன்னால் உள்ள பணி அந்த எண்ணெயை வெளியே எடுப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பதாகும்,” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் விளக்கினார்.

இந்த படிவுகளில் உள்ள எரிபொருளை வெளியே எடுக்கும் செயல்முறைக்குச் சற்று காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தத் திட்டத்தின் விளைவாக எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக எரிபொருள் மற்றும் எரிவாயுக்காக வெளிநாடுகளில் தங்கியிருப்பதை கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

“இலங்கையில் இவ்வளவு எரிபொருள் படிவுகள் உள்ளன. அவை கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு ஐந்து படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏற்கனவே மூன்று அல்லது நான்கு படிவுகளில் எரிபொருள் இருப்பது குறித்து கணிசமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அவை தரவு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அங்குள்ள நிபுணர் குழு மிகவும் நம்பிக்கையுடன் கூறுகிறது, இது எண்ணெய் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியது அல்ல, எண்ணெய் இருப்பது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று.

இப்போது இருக்கும் அந்த எண்ணெயை வெளியே எடுப்பதற்கான பொறிமுறைதான் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்குச் சற்று காலம் எடுக்கும்.

எனவே, எதிர்காலத்தில் அதன் பலன் கிடைப்பதன் மூலம் எரிபொருள் மற்றும் எரிவாயுக்காக வெளிநாடுகளில் தங்கியிருப்பதை ஓரளவிற்கு எம்மால் குறைத்துக்கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Recent Articles

Back to top button