News

சிவில் மக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் இலங்கை அரசாங்கம் கண்டிக்கிறது..

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவில் மக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களையும் இலங்கை அரசாங்கம் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சிவில் மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ள மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் வேகமாக அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து தனது கவலையையும் அது வெளியிட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிவில் மக்களைப் பாதுகாப்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் ஒரு அடிப்படைப் பொறுப்பு என்பதை இலங்கை வலியுறுத்தியுள்ளது. மனித உயிர்களின் புனிதத்தன்மை மற்றும் உலகளாவிய அமைதியைப் பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிய மனிதாபிமான நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் மற்றும் அதன் விளைவாக அனைத்து நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுகிறது.

எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக சக்தியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து நாடுகளினதும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு நாடு என்ற ரீதியில், இந்தப் பழமையான கொள்கைகளை மதிக்குமாறு போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இத்தகைய சந்தர்ப்பத்தில் மிக உயர்ந்த மட்டத்திலான நிதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், இந்த அபாயகரமான நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறும், மோதல் சூழலைத் தணிப்பதற்குத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை அனைத்துத் தரப்பினரிடமும் மேலதிகமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

Recent Articles

Back to top button