மத்திய கிழக்கிற்குப் பதிலாக அமெரிக்காவிலிருந்து எரிவாயு இறக்குமதி: விநியோகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கையின் எரிவாயு விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, மத்திய கிழக்கைச் சார்ந்து இருப்பதை விடுத்து அமெரிக்காவிலிருந்து உள்நாட்டு எரிவாயுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தீர்மானத்தின் கீழ் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள பாரிய எரிவாயு கப்பல் ஒன்று, இலங்கையில் நிலவும் போதிய களஞ்சிய வசதியின்மை காரணமாக மாலைத்தீவு கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன ‘டெய்லி மிரர்’ க்கு வழங்கிய செவ்வியில்..
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் விநியோகத் தடைகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து எரிவாயுவை கொள்வனவு செய்யத் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, வரும் காலங்களுக்கான எரிவாயு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கடல் வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 22,000 தொன் எரிவாயு இருப்பு தற்போது மாலைத்தீவுக்கு அருகில் உள்ள கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கெரவலப்பிட்டிய களஞ்சிய முனையத்தில் இடவசதி போதாமையே இதற்கு காரணமாகும். இது தவிர மேலும் 33,000 டொன் எரிவாயு இருப்பு எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ளது.”
அமெரிக்காவிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்து வினவியபோது, விலையில் குறிப்பிடத்தக்க குறைவு எதுவும் தென்படவில்லை என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் எரிவாயுவின் விலை சற்றே குறைவாக இருந்தாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதாகவும், இதன் காரணமாக சந்தையில் பெரிய விலை அனுகூலம் இல்லாவிட்டாலும் விநியோகப் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார்
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த தலைவர், லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு நிறுவனத்தின் விநியோகக் கட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள மேலதிக கேள்வியைப் பூர்த்தி செய்ய லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
முக்கிய நகரங்களில் விநியோகம் வழமை போல் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாட்டின் உட்புறப் பகுதிகளில் உள்ள விநியோக மையங்களில் இன்னும் சில தட்டுப்பாடுகள் நிலவுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.
சாதாரண சந்தை நிலவரப்படி, லிட்ரோ நிறுவனம் மாதத்திற்கு 33,000 டொன் எரிவாயுவை விநியோகிப்பதுடன், ஏனைய நிறுவனங்கள் விநியோகத்திற்கான பொறுப்பை ஏற்றுள்ளன.



