News

மின்வெட்டு அவசியமில்லை: எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் உறுதி

தற்போதுள்ள எரிபொருள் இருப்பு, நிலக்கரி விநியோகம் மற்றும் நீர் நிலைகளின் மட்டங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் மின்சாரக் வெட்டினை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தித் திறன் குறித்த கணிப்பீடுகளின்படி, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

மின்சாரத் தேவை மற்றும் சூரிய சக்தியின் பங்களிப்பு

நாட்டின் தற்போதைய தினசரி அதிகபட்ச மின்சாரத் தேவை சுமார் 3,000 மெகாவாட் ஆகும். இதில் கணிசமான அளவு பகல் நேரங்களில் சூரிய சக்தி (Roof Top Solar) மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக அமைச்சர் விளக்கினார். பகல் வேளையில் சுமார் 2,000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்படுவதால், அந்த நேரத்தில் சூரிய சக்தியை அதிகளவில் பயன்படுத்துவதற்காக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நிலைமை

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் முழு கொள்ளளவு 900 மெகாவாட் என்ற போதிலும், அதிலிருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு 810 முதல் 840 மெகாவாட் வரையே இணைக்க முடியும். நிலக்கரியின் தரம் காரணமாக மின் உற்பத்தித் திறன் சில சந்தர்ப்பங்களில் 40 முதல் 100 மெகாவாட் வரை மாறுபடலாம் என்பதை பிரதி அமைச்சர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், 150 மெகாவாட் குறைபாடு நிலவுவதாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மையல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

இரவு நேர சவால்களை முகாமைத்துவம் செய்தல்

இரவு 6 மணி முதல் 10 மணி வரையிலான ‘உச்ச மின்சாரத் தேவையை’ முகாமைத்துவம் செய்வதே பிரதான சவாலாகும். அந்த நேரத்தில் சூரிய சக்தி கிடைக்காததால், நீர்மின்சாரம், நிலக்கரி, எரிபொருள் எண்ணெய் மற்றும் இறுதி விருப்பமாக டீசலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

காற்று மற்றும் சூரிய சக்தி வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, மின்வெட்டு இன்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button