கத்தாரின் பாரிய எரிவாயு கிடங்கு மீது ஈரான் தாக்குதல்.. மசகு எண்ணெய், எரிவாயு விலை அதிகரிப்பு..

கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இந்தச் சூழல் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தல் என கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை, ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் கூட்டாகப் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய எரிவாயு மையமான ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, கட்டாரின் ‘ராஸ் லஃப்பான்’ (Ras Laffan) தொழில்துறை நகரில் அமைந்துள்ள எரிசக்தி வளாகத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானியத் தாக்குதலைத் தொடர்ந்து ராஸ் லஃப்பானில் ஏற்பட்ட தீயை அணைக்க சிவில் பாதுகாப்புப் குழுக்கள் நடவடிக்கை எடுத்ததாக கட்டார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டார் வெளியுறவு அமைச்சு இதனை “நாட்டின் இறையாண்மையை கடுமையாக மீறும் செயல் மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல்” என வர்ணித்துள்ளது.
சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம்:
இந்த மோதல் நிலைமையால் வியாழக்கிழமை காலை ஆசிய சந்தையில் எரிசக்தி விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது:
• பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய்: 4.3% அதிகரித்து ஒரு பேரல் 112 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
• WTI கச்சா எண்ணெய்: 3.8% அதிகரித்து ஒரு பேரல் 100.02 டொலர்களாக உயர்ந்துள்ளது.
• இயற்கை எரிவாயு: அமெரிக்காவில் 6.3 சதவீதத்தாலும், ஐரோப்பாவில் 6 சதவீதத்தாலும் விலை அதிகரித்துள்ளது.
பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெஹ்ரான் (ஈரான்) ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த புதிய தாக்குதல்கள் உலகச் சந்தையை மேலும் சீர்குலைக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



