“பெட்ரோல் லீட்டர் 430 ரூபா.. டீசல் 586 ரூபா.. நஷ்டத்திற்கே விற்பனை செய்கிறோம்- சிபெட்கோ தலைவர்

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப, நாட்டில் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 260 ரூபாவினாலும், பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் D J A S De S ராஜகருணா இதனைத் தெரிவித்தார்.
தற்போது நிலவும் உலகளாவிய சூழ்நிலை காரணமாகவே, எதிர்பாராத விதமாக இவ்வளவு விரைவாக எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பாக, போர்ச் சூழல் ஆரம்பமான ஆரம்ப நாட்களில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் காரணமாக வரிசைகளில் நின்று எரிபொருளை சேகரித்ததால், கூட்டுத்தாபனத்திடம் இருந்த எரிபொருள் கையிருப்பு வேகமாக முடிவடைந்ததே இந்த நிலைமைக்கு பிரதான காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தலைவர் முன்வைத்த தரவுகளின்படி, பெட்ரோல் லீட்டர் ஒன்றிற்காக 430 ரூபா செலவு ஏற்படுகின்ற போதிலும், அது தற்போது 398 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, பெட்ரோல் லீட்டர் ஒன்றின் மூலம் கூட்டுத்தாபனம் 32 ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது.
டீசல் தொடர்பான நிலைமை மிகவும் பாரதூரமானது எனத் தெரிவித்த அவர், டீசல் லீட்டர் ஒன்றின் உற்பத்திச் செலவு 586 ரூபாவாக இருந்தும், தற்போது 382 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுவதாகக் கூறினார். இதன் மூலம் டீசல் லீட்டர் ஒன்றிலிருந்து 204 ரூபா பாரிய நஷ்டம் ஏற்படுவதாக தலைவர் வலியுறுத்தினார்.



