ஈரானைத் தாக்க சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்காவுடன் கைகோர்க்க தீர்மானம் !

பிராந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தீவிர இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) மிகுந்த தயார் நிலையில் இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே சவூதி அரேபியா தனது எல்லைக்குள் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கப் படைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், இது ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒரு தீர்மானமிக்க திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த இந்தப் போர், தற்போது முழு வளைகுடா பிராந்தியத்திற்கும் பரவியுள்ளது. ஈரான் தொடுத்த பதில் தாக்குதல்களால் பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார் உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளதுடன், அமீரகம் மற்றும் சவூதியின் சுற்றுலாத்துறைக்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் இந்த மோதலில் நேரடியாக தலையிட வேண்டாம் என்று சவூதி அரேபியா தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் தொடர்ந்து முன்னெடுக்கும் தாக்குதல்களால் தமது பொறுமைக்கு எல்லை உண்டு என்று சவூதி வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் தெரிவித்தார். “சவூதி அரேபியா போரில் இறங்குவது காலத்தின் கட்டாயம் மட்டுமே” என்று வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்திகளை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் இராணுவ வலிமையை முழுமையாக முடக்கும் வரை தாக்குதல்களைத் தொடருமாறு வளைகுடா நாடுகள் அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கும் சில இராணுவத் தீர்மானங்கள் குறித்து வளைகுடா தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஈரானின் எரிசக்தி மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் குறித்து முன்னறிவிப்பு வழங்காமை தொடர்பாக இந்நாடுகள் கவலை கொண்டுள்ளன.
ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை முடக்குவதும், பிராந்திய பயங்கரவாதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்தி, ஈரான் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பின்னணியை உருவாக்குவதுமே இந்தப் போரின் முதன்மை நோக்கம் என்று இஸ்ரேலியத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.



