மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி கோரிக்கை ..

கம்பஹா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி, மின்சாரத் தேவை உச்சமடையும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தற்போதைய நிலவரப்படி மின்வெட்டை அமல்படுத்த அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், மின் கட்டமைப்பின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக மின் தேவை அதிகமாக இருக்கும் இரவு நேரங்களில் தேவையற்ற விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அணைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“முடிந்தவரை ஒரு மின்விளக்கையாவது அணைத்து ஒத்துழைப்பு வழங்குங்கள். அந்த நேரத்தில்தான் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் பிரச்சினை இல்லை. இரவு நேரத்தில் ஒரு பிரஜையாக நாம் அந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும். ஏனெனில், அந்தச் சுமை இறுதியில் மக்களாகிய எமக்கே வந்து சேரும்.
மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருளை வழங்க வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். பிராந்திய ரீதியாகப் பார்த்தாலும் நாம் இதனைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றோம் என்று நான் நினைக்கிறேன். வருங்காலத்திலும் நாம் அதைச் செய்ய வேண்டும். அதற்காக எரிபொருளைக் கொள்வனவு செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அரசாங்கம் என்ற வகையில் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், பலர் மின்வெட்டை அமல்படுத்துமாறு முன்மொழிகின்றனர். ஆனால் எமக்கு அத்தகைய எண்ணம் இல்லை. நாம் எப்படியாவது மின்வெட்டைத் தவிர்க்கவே முயற்சிக்கின்றோம். மே மாதம் வரை நுகர்வுக்குத் தேவையான எரிபொருள் எங்களிடம் உள்ளது. எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை.”



