News

சமாதானத் திட்டங்களை நிராகரித்தது ஈரான்: பாரிய தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை

தற்போதைய போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய சமாதானத் திட்டத்தை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. ஈரானின் சிரேஷ்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘பிரஸ் டிவி’ (Press TV) செய்திச் சேவை இதனைப் புகாரளித்துள்ளது. எந்தவொரு போர் நிறுத்தமும் ஈரான் விதிக்கும் நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படி மட்டுமே அமைய வேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் திகதியைத் தீர்மானிக்க அனுமதிக்கப்போவதில்லை என வலியுறுத்திய அந்த அதிகாரி, “ஈரான் தனது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்த பின்னரே, தனக்குத் தேவையான நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவரும்” எனத் தெரிவித்தார். மேலும், எதிரிகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுத்து தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் முன்வைக்கும் முன்மொழிவுகள் மிகவும் அநீதியானவை என்றும், அவை போர்க்களத்தின் உண்மையான நிலவரத்திற்கு முரணானவை என்றும் ஈரான் கூறுகிறது. 2025 ஆம் ஆண்டின் வசந்த மற்றும் குளிர்காலங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏமாற்றுத்தனமானவை என்றும், அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஈரான் முன்வைத்துள்ள 5 நிபந்தனைகள்:

போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கு ஈரான் பின்வரும் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளது:

1. எதிரிகளால் முன்னெடுக்கப்படும் அனைத்து ஊடுருவல்கள் மற்றும் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. மீண்டும் ஈரான் மீது போர் திணிக்கப்படாது என்பதற்கான நிரந்தர பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

3. போர் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாக தெளிவான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. பிராந்தியத்தின் அனைத்து முன்னணிகளிலும் மற்றும் அனைத்து எதிர்ப்புப் குழுக்கள் தொடர்பிலும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

5. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பாக ஈரானுக்கு உள்ள இறையாண்மை உரிமையை சர்வதேச ரீதியாக அங்கீகரித்து அதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் போர்ச் சூழல் தீவிரமடைந்தது. அதற்குப் பதிலடியாக ஈரான் ஆயுதப் படைகள் இதுவரை பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது சுமார் 80 பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

Recent Articles

Back to top button