News

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லட் உள்ளிட்ட இனிப்புகளின் விலைகள் மே மாதம் வரை அதிகரிக்கப்பட மாட்டாது !

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திகளின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையின் கீழ், பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனை முகாமைத்துவம் செய்ய உற்பத்தியாளர்கள் எடுக்கும் முடிவுகள் நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

நுகர்வுப் பொருட்களின் விலை உயர்வு இந்தத் தருணத்தில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாதது என்றும், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் பிஸ்கட் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாதுகாத்து, நுகர்வோர் பாதிக்கப்படுவதைக் குறைக்கும் வகையில் முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையிடத் தயாராக இருப்பதாகவும், சிரமங்களுக்கு மத்தியிலும் நுகர்வோர் குறித்து சிந்தித்துச் செயற்படுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி. சூரியகுமார:

“எமது கைத்தொழில் குறித்து கவனம் செலுத்தியமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் என்று சொன்னாலும், இதில் பிஸ்கட் மட்டுமல்ல ஐஸ்கிரீம், சொக்லட் என அனைவரும் எமது உறுப்பினர்களாக உள்ளனர். சுமார் 50,000 ஊழியர்கள் நேரடியாகவும், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் இத்தொழிலில் தங்கியுள்ளனர். உள்நாட்டு சந்தைத் தேவையில் 95% உற்பத்திகளை முன்னெடுக்கும் ஒரே தன்னிறைவு பெற்ற கைத்தொழில் இதுவாகும். கடந்த 10 ஆண்டுகளில் எமது முதலீட்டாளர்கள் 15 பில்லியனுக்கும் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகளைச் செய்துள்ளனர். இன்று எமது பல தயாரிப்புகள் சர்வதேச தரத்தில், ஆரோக்கியமான முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன.

சர்வதேச தயாரிப்புகளுடன் போட்டியிடும் நாம் ஒரு பலமான உள்நாட்டுத் துறையாக இருக்கிறோம். எமக்குள்ள மிகப்பெரிய பிரச்சினை பயன்பாட்டுச் செலவு (Utility cost) ஆகும். கடந்த காலங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமன்றி, எமது பிரதான மூலப்பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவை. கொவிட் காலத்திற்குப் பிறகு நாம் விலைகளை அதிகரிக்கவில்லை. மிகக் குறைந்த இலாபத்துடனேயே இத்தொழிலை முன்னெடுத்து வருகிறோம். மார்ச், ஏப்ரல், டிசம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களே எமது சிறந்த விற்பனை காலமாகும். தற்போது புத்தாண்டுக்கான அனைத்து உற்பத்திகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே, என்ன பிரச்சினைகள் வந்தாலும் சித்திரை புத்தாண்டு முடியும் வரை விலைகளை அதிகரிப்பதில்லை என சங்கம் தீர்மானித்துள்ளது.”

மே மாதத்திற்குப் பிறகு எரிவாயு, மின்சாரக் கட்டணம் மற்றும் மூலப்பொருள் விலைகள் மேலும் அதிகரித்தால் மட்டுமே விலை திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தலைவர் சூரியகுமார மேலும் தெரிவித்தார்.

மூலப்பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் பாரிய தாமதம் ஏற்படுவதாகவும், கப்பல் கட்டணமாக மேலதிக கட்டணம் அறவிடப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், மே மாதம் வரை விலைகளை மாற்றப்போவதில்லை என்றும், புத்தாண்டு கால விநியோக நடவடிக்கைகளுக்காகத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முறையான வழிமுறையொன்றை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

Recent Articles

Back to top button