எரிபொருள் செலவு இரண்டு மூன்று மடங்காக உயரும்.. எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்..- சிபெட்கோ

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தணியாமல் மேலும் தீவிரமடைந்தால், உள்நாட்டு எரிசக்தி சந்தையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த களஞ்சிய முனைய நிறுவனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூரா நெத்திகுமார குறிப்பிடுகையில், சர்வதேச அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாரிய தாக்கம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 4.5 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவிடப்படுகிறது.
பிராந்திய பதற்ற நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் இந்தத் தொகை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என கூட்டுத்தாபனம் கணித்துள்ளது.
இறக்குமதிச் செலவுகள் இவ்வாறு பாரியளவில் அதிகரித்தால், நுகர்வோர் விலையை திருத்தம் செய்வதைத் (விலையேற்றம்) அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது என நெத்திகுமார மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழ்நிலையில், உள்நாட்டுப் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேணுவது வரும் காலங்களில் ஒரு பிரதான சவாலாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



