News

“தரம் குறைந்த நிலக்கரி மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதற்குக் காரணம்.. இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்..- IMF பிரதானி”

நிபந்தனைக்கு உட்பட்ட கொள்முதல் செயல்முறையின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி அதிகபட்ச கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமை, நாட்டில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பாஜார்ஜியு ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறான தொழில்நுட்ப அல்லது செயல்பாட்டு சிக்கல்களால் இலங்கை மின்சார சபை சந்தித்துள்ள நஷ்டத்தை ஈடுகட்டுவது குறித்து, எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களைத் தீர்மானிக்கும் போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தச் சூழ்நிலையில், செலவுகளை ஈடுகட்டும் வகையில் மின்சாரக் கட்டணங்களை திருத்தியமைக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் ஒரு முன்கூட்டிய நிபந்தனையாக விதித்துள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளதால் மின் உற்பத்திச் செலவு மேலும் அதிகரித்துள்ளதாகவும், இதற்கமைய மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள புதிய கோரிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானம் செலுத்தி வருவதாக பாப்பாஜார்ஜியு குறிப்பிட்டார்.

இருப்பினும், இவ்வாறான செலவுகளை ஈடுகட்டும் கட்டண முறையை நடைமுறைப்படுத்தும் போது, சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்காக தற்போது ஊழியர் மட்டத்திலான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், நிறைவேற்றுக்குழுவின் அங்கீகாரத்தின் பின்னர் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதித் தவணை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

குறித்த அங்கீகாரம் அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் மூலம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய மொத்த நிதி 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.

இலங்கை அடைந்துள்ள நிதி முன்னேற்றம் பாராட்டுக்குரியது என்றும், மொத்த வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது என்றும் கூறிய பாப்பாஜார்ஜியு, NDB வங்கியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் 13.2 பில்லியன் ரூபா மோசடி தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் அவதானித்து வருவதாகத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button