News

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ யாவருக்கும் உரித்தாக்க சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்…

ஜனாதிபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுச் செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதிய எதிர்பார்ப்புகளைக் குறியீடு செய்யும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து, சடங்குகள் மற்றும் மதச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, ஒரே சுபவேளையில் கூட்டாகச் செயற்படுவது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் சிறப்பம்சமாகும். இந்தப் பண்பாட்டுப் பகிர்வு, உலகிற்கு முன்னால் நமது நாட்டின் தனித்துவத்தையும் எமது சமூகங்களுக்கிடையில் நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் செம்மையாகப் பிரதிபலிக்கின்றது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை இந்த பெறுமதிமிக்க கலாசாரத்துடனும், சிறந்த வரலாற்று மரபுரிமையுடனும் இணைத்தே தேர்ந்தெடுக்க முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதிமிக்க பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாகக் காலூன்றி உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நினைவூட்ட வேண்டும்.

அதேபோல், சூரிய சங்கிராந்தியை ஒட்டி மேற்கொள்ளப்படும் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களினதும் பொதுவான நோக்கம், கூட்டுப்பண்பை மதிக்கும், மற்றவர்களினதும் இயற்கையினதும் வாழ்வியலுக்கு மதிப்பளிக்கும் மனிதாபிமானமுள்ள புதிய மனிதனை உருவாக்குவதாகும். புத்தாண்டுச் சடங்குகளின் மூலம் வெளிப்படும் அக்கூட்டுப்பண்பின் குணாதிசயங்களும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, வருடம் முழுவதும் எமது நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்நோக்கிய அண்மைக்காலத்தின் பாரிய இயற்கை அனர்த்த சவால்களின் போது நாம் உலகிற்கு வெளிப்படுத்திய உள்நாட்டு அதிர்ச்சிகளைத் தாங்கும் திறன் மற்றும் மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வெளிவாரியான சவால்களுக்கு மத்தியிலும், திட்டமிட்ட ரீதியில் முறையான முகாமைத்துவத்துடன் செயற்பட்டு அந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்தச் சவால்களை வெற்றிகொள்ளும் போது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் கூட்டுப்பண்பு மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற குணாதிசயங்களின் மூலம் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

ஈட்டிய வெற்றிகளை மேலும் பலப்படுத்துவதோடு, எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் தளராது முன்னேறி, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ யாவருக்கும் உரித்தாக்க சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி,

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

Recent Articles

Back to top button