News

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இன்னும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இன்னும் குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், இந்த விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், விசாரணைகளை தொடர்ந்தும் சரியான முறையில் முன்னெடுப்பதற்கு பொலிஸாரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID) நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கும் விடயங்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளதோடு, இன்னும் குறுகிய காலத்திற்குள் அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேபோல், ஈஸ்டர் தாக்குதல் மாத்திரமன்றி, நாட்டில் இடம்பெற்ற அனைத்து சட்டவிரோத செயற்பாடுகள், லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இம்முறை மே தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள அனைத்து மே தினப் பேரணிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button