மகா திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு ? விசாரணை நடத்துமாறு சபாநாயகருக்கு கடிதம் ..

‘Free Lawyers’ அமைப்பினால் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே தரப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 22
கௌரவ சபாநாயகர் அவர்களே,
இலங்கை பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே,
கோட்டே.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
மகா திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கை.
இலங்கை அரசாங்கம் 2025 செப்டம்பர் மாத இறுதியில் 22.9 மில்லியன் டொலர் கடன் தொகையை செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதில் ஒரு பகுதியான 2.5 மில்லியன் டொலர் தொகையை மகா திறைசேரியானது 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி 31 வரையான காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ளது. அந்த நிதி உரிய கடன் வழங்குநருக்கு (நாடு) செல்லாமல், கணினி ஹேக்கர் ஒருவரிடமோ (அல்லது மூன்றாவது தரப்பினரிடமோ) சென்றுள்ளதாக அறிய முடிகிறது.
தற்போது, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ‘தொழில்நுட்ப விசாரணை குழு’ ஒன்று 2026.03.24 அன்று அல்லது அதனை ஒட்டிய காலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திறைசேரியின் இரு பிரதிப் பணிப்பாளர்கள், இரு பணிப்பாளர்கள் மற்றும் கணினிப் பிரிவின் பிரதானி ஒருவர் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தாங்கள் அறிந்தபடி, அண்மைக்காலம் வரை வெளிநாட்டு கடன், தவணைக்கட்டணம் மற்றும் வட்டி செலுத்தும் நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டன. புதிய நிதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தப் பொறுப்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த கொடுப்பனவு தொடர்பான ஆவணங்களை தயாரித்ததும், கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் அந்த நிறுவனங்களே ஆகும்.
2.5 மில்லியன் டொலர் கொடுப்பனவை மேற்கொள்வதற்கு ஒரு பிரதித் திறைசேரி செயலாளர், கணக்காளர் மற்றும் கணினிப் பிரிவு அதிகாரிக்கு மாத்திரம் அதிகாரம் இல்லை. அதற்கு நிச்சயமாக பிரதித் திறைசேரி செயலாளர் (DST) மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரும் தொடர்புபட்டிருக்க வேண்டும்.
அரச நிதி தொடர்பான இறுதிப் பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உரியது. தற்போது இந்த விசாரணையானது கடன் செலுத்துகை குறித்த இறுதிப் பொறுப்பை வகிக்கும் ஒரு மேலதிக திறைசேரி செயலாளரின் கீழேயே நடைபெற்று வருகின்றது. அவர் இந்த விசாரணையை முன்னெடுக்கும் அதேவேளை, தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட திணைக்களத்தின் செயற்பாடுகளையும் வழிநடத்தி வருகின்றார்.
மகா திறைசேரி தொடர்பான பொறுப்பை வகிக்கும் நிதி அமைச்சின் செயலாளர், மகா திறைசேரியின் செயலாளராகவும் இருப்பதால், இது தொடர்பான விசாரணையானது நிதி அமைச்சு/திறைசேரிக்கு வெளியிலான குழுக்களினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும்.
எனவே, அரச நிதிப் பொறுப்பைக் கொண்டுள்ள பாராளுமன்றமானது, பொருத்தமான வழிமுறையூடாக இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை முன்னெடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள,
மைத்திரி குணரத்ன
ஜனாதிபதி சட்டத்தரணி
தலைவர் / ‘Free Lawyers’ அமைப்பு
பிரதிகள்:
1. இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள்/பொதுச் செயலாளர்கள்.
2. பாராளுமன்ற நிதிக்குழு.
3. கணக்காய்வாளர் நாயகம், தேசிய கணக்காய்வு ஆணைக்குழு.
4. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா – தலைவர், பாராளுமன்ற அரச நிதி பற்றிய குழு.



