இந்தியாவுக்கு நாம் முக்கியமான உத்தரவாதம் கொடுத்துள்ளோம்; அனுரா நேர்காணல்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு நாடும் எந்தவிதத்திலான தலையீட்டினைச் செய்தாலும் வாக்காளர்களின் வாக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்த முடியாது. எந்த நாடு எந்த அரசியல் தேவையுடன் காய்களை நகர்த்தினாலும் எமது நாட்டு மக்கள்தான் ஜனாதிபதியை தீர்மானிப்பார்கள்.இந்திய பாதுகாப்பு ஆலோசகரை இந்தியாவிலேயே சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். நாங்கள் அவருக்கு மிகவும் முக்கியமான உத்தரவாதமொன்றை கொடுத்திருக்கிறோம் என ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
அநுரகுமார திசாநாயக்கவுடனான பேட்டி வருமாறு;
கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவிட்டது. உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் எமது நாட்டில் மாற்றமொன்றுக்கான தேவை இருக்கிறது. அந்த மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் இயக்கமே நாங்கள். நீண்டகாலமாக எமது நாட்டு மக்கள் இந்த மாற்றத்திற்காக போராடினார்கள். எனினும் அதனை யதார்த்தமானதாக மாற்றிக்கொள்ள முடியவில்லை.அந்த மாற்றத்தை யதார்த்தமானதாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது. அதனால் இந்தத் தேர்தலில் எம்மால் நிச்சயம் வெற்றிபெற முடியும்.
கேள்வி: கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கு 4,18,553 வாக்குகளே கிடைத்தன.இந்த நிலைமையில் இம்முறை நீங்கள் 50 வீத வாக்குகளை தாண்டுவீர்கள் என்று எப்படி நம்புகின்றீர்கள்?
பதில்: கணித ரீதியாக பார்த்தால் நீங்கள் கூறுகின்ற கதை உண்மை. எனினும் அரசியல் என்பது எண் கணிதமல்ல. அரசியல் என்பது சமூக விஞ்ஞானம். நாட்டு மக்கள் பாரிய மாற்றமொன்றை, அவசரமாக கோரி நிற்கிறார்கள். அந்த மாற்றம் தான் எமது பிரதான சக்தியாக மாறியிருக்கிறது. இன்றளவில் நாங்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நாட்டில் பல்வேறு சமூக குழுக்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.அவர்களை ஒழுங்கமைத்திருக்கிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாலயர் என்ற பேதமின்றி கருத்தியலை பலப்படுத்தி இருக்கிறோம்.அதனால் இந்த நூற்றுக்கு 50 வீதத்தை விஞ்சிய பாய்ச்சலை எடுக்க முடியும். அது ஒரு அரசியல் பாய்ச்சலாகும். இதனூடாக மிகவும் தெளிவான வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும்.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு எதிராக இந்தியா காய்நகர்த்தல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகின்றதே?
பதில்: எந்த நாடும் எந்த அரசியல் தேவையுடன் காய்களை நகர்த்தினாலும் எமது நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அதனால் மக்களின் மனங்களிலுள்ள அவர்களின் தேவைகளை எவராலும் மாற்றியமைக்க முடியுமென நாங்கள் நம்பமாட்டோம். இந்த புதிய நிலை மாற்றம் மக்களுக்கே தேவைப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் அரசியல் கட்சிகளின், கட்சித் தலைவர்களின் கடப்பாடுகள் என்ற எல்லாவற்றையும் விஞ்சி சென்று பொதுத்தேவையாக மாறியிருக்கிறது. அதனால் எந்தவொரு நாடும் எந்த விதத்திலான தலையீட்டினைச் செய்தாலும் வாக்காளர்களின் வாக்குகள் மீது தாக்கம் ஏற்படுத்த முடியுமென நான் நம்பப் போவதில்லை.
கேள்வி: அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் உங்களை ஏன் சந்தித்தார்?
பதில்: அவர் இந்நாட்டின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு முன்னரும் நான் அவரை இந்தியாவிலேயே சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். நாங்கள் அவருக்கு மிகவும் முக்கியமான உத்தரவாதமொன்றை கொடுத்திருக்கிறோம். எங்களுடைய நிலம், வான் மற்றும் கடல் என்பவற்றை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் நாங்கள் பாவிக்க மாட்டோம் என்கின்ற உத்தரவாதத்தை அளித்திருக்கிறோம். அதனைத் தவிர்ந்ததாக நாட்டில் தோன்றியுள்ள நிலைமை பற்றியும் இலங்கையின் எதிர்காலம் பற்றியுமே நாங்கள் உரையாடினோம்.
கேள்வி: வடக்கு, கிழக்கில் உங்களுக்கான ஆதரவு எப்படி இருக்கின்றது?
பதில்: கடந்த தேர்தல்களின் போது வடக்கு, கிழக்கு ஒட்டுமொத்தமாக ஒரு குழுவிற்கு எதிராகவே செயலாற்றியதென்பதை நாங்கள் குறிப்பாக அறிவோம். உதாரணமாக 2010 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு எதிராக பொன்சேகாவிற்கு வாக்குகளை அளித்தார்கள். 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவிற்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவிற்கும் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக சஜித் பிரேமதாசவிற்கும் வாக்குகளை அளித்தார்கள். எனினும் தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒரு பொதுக்காரணி கிடையாது. இதற்கு முன்னர் இருந்த ஒரே பொதுக்காரணி ராஜபக்ஷ முகாமாகும். இப்போது பார்த்தால் ராஜபக்ஷ முகாம் மூன்றாக பிரிந்து விட்டது. பெரும்பாலனவர்கள் ரணிலுடனும் மற்றுமொரு பங்கு சஜித் பிரேமதாசவுடனும் நாமல் ராஜபக்ஷவுடனும் இருக்கின்றது. மொட்டுக் கட்சியின் ராஜபக்ஷ ஆதரவு முகாம் மூன்றாக பிளவுபட்டுள்ள சூழலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு முன்னரைவிட சுதந்திரமாக சிந்திப்பதற்கான வாய்ப்பு நிலவுகிறது.தமக்கெதிராக இருக்கின்ற ஒரே முகாமை தோற்கடிக்கின்ற அரசியலை புரிவதற்கான தேவைப்பாடு தற்போது கிடையாது. அதைப்போலவே முன்னரைவிட நாங்கள் வடக்கு, கிழக்கிற்கு எங்களுடைய கருத்தியலை எடுத்துச் சென்றிருக்கிறோம். வடக்கு, கிழக்கிற்கு தனிவேறான வேட்பாளர் ஒருவரும் முன்வந்துள்ளார். இந்தக் காரணிகள் அனைத்தையும் கருத்திற் கொண்டால் எமது வெற்றிக்கான சிறந்த பெறுபேற்றினை வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்து வழங்குவார்கள் என்பது எமது நம்பிக்கை.
கேள்வி: தமிழ் மக்களை பொறுத்தவரையில் இணைந்த வடக்கு – கிழக்கை பிரித்தவர்கள், தமிழ் மக்களின் உரிமை போராட்டத்துக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்கத் தூண்டியவர்கள் என்ற குற்றச்சாட்டுகள் உங்கள் மீது உள்ளனவே?
பதில்: வடக்கு, கிழக்கு 1987 இந்திய – இலங்கை உடன்படிக்கைக்கு இணங்க தற்காலிகமாகவே ஒருங்கிணைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு பின்னர் அந்த ஒருங்கிணைப்பிற்கான மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்த வேண்டியிருந்தது. 1990 இலிருந்து 2005 வரையிலான 15 வருட காலத்தில் இந்த மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்படவில்லை. மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படாமல் தொடர்ந்தும் ஒருங்கிணைத்திருப்பது சட்டரீதியானதா? இல்லையா என்ற விடயத்தையே நாங்கள் உயர்நீதிமன்றத்திடம் வினவினோம்.
அரசியலமைப்பு ரீதியாக நடத்தப்பட வேண்டியிருந்த மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்தாதிருந்தமை தொடர்பிலேயே நாங்கள் நீதிமன்றத்திடம் சென்றோம். உண்மையாகவே நடைபெறவேண்டியிருந்தது மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்தி ஒருங்கிணைக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிப்பதாகும். வடக்கு, கிழக்கை ஒருங்கிணைத்தல் சம்பந்தமாக மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்துவதாகவும் அந்த மக்கள் கருத்துக்கணிப்பின்போது அந்த இரண்டு மாகாணங்களையும் பிரித்தொதுக்குவதற்கான கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதாகவுமே ஜே.ஆர்.ஜயவர்தன பகிரங்கமாக கூறினார். அத்தகைய மக்கள் கருத்துக் கணிப்பினூடாக முறைப்படி ஒருங்கிணைக்காமையாலேயே இந்த சிக்கல் தோன்றியது.யுத்தத்தின்போது சாதாரண பொதுமக்கள் முகங்கொடுக்கின்ற சிக்கல்கள் பற்றி இடதுசாரி மனிதநேயமுள்ள இயக்கம் என்ற வகையில் நாங்கள் இதைவிட கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாமை எங்களுடைய ஒரு குறைபாடென நாங்கள் காண்கிறோம்.
கேள்வி: உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய வாக்குறுதி எதையுமே காணக்கூடியதாக இல்லையே?
பதில்: அப்படியானால் நீங்கள் எமது கொள்கைப் பிரகடனத்தை வாசிக்கவில்லை. நாங்கள் வெறுமனே ஒரு கொடுக்கல் வாங்கலுக்காக வரவில்லை. வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடனும் நாங்கள் புரிவது கொடுக்கல் வாங்கலை அல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரசாங்கமொன்றை அமைத்திடுவோம் என்கின்ற மிகவும் பொதுவான விடயத்தையே முன்வைத்திருக்கிறோம். அந்த அரசாங்கத்தில் எங்கள் ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான கூட்டு முயற்சியை முன்னெடுப்போம்.
அதற்காக நாங்கள் புதிய அரசியலமைப்பு பற்றி, மாகாண சபைகள் தேர்தலை உடனடியாக நடத்துதல் பற்றி, மக்களின் உள்ளடக்கத்திற்கு குந்தகம் ஏற்படுகின்ற வகையில் குடியேற்றங்களை நிறுவாமை பற்றி, மொழியுரிமையை நடைமுறையில் உறுதிசெய்வது பற்றி, உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழுவை மென்மேலும் பலப்படுத்துவது பற்றி, மதம், மொழி, கலாசாரத்திற்கு இணங்க எவரேனும் கொச்சைப்படுத்தப்படுவாரெனில் அதற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கான ஆணைக்குழுவை நிறுவுதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியிருக்கிறோம்.
இதன்படி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கான பலம்பொருந்திய வேலைத்திட்டம் எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி: உங்களுடைய ஆட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படுமென நம்பிக்கை வைக்க முடியுமா?
பதில்: ஆம் நிச்சயமாக. உங்களை பல தசாப்தங்களாக ஏமாற்றிய ஆட்சியாளர்களை விட நீங்கள் எங்களை நம்புங்கள். இதுவரை உங்களின் வாக்குகளை பெற்ற ஆட்சியாளர்கள் உங்களை நம்பவில்லையென்பது தான் உங்களுடைய கேள்வியிலிருந்து எழுகின்றது. அவர்கள் சதாகாலமும் வடக்கிற்கு ஒன்றை கூறிவிட்டு தெற்கிற்கு வேறொன்றை கூறுகின்ற அரசியலில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அதனால் வடக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு பிறிதொன்றும் என்கின்ற அரசியலுக்கு பதிலாக வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே அரசியல் பற்றிய உறுதிப்பாட்டினை கொண்டிருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.
வடக்கிற்கு செல்லும்போது ஒரு சில தலைவர்களை மறைத்துவைத்துவிட்டு தெற்கிற்கு செல்லும்போது ஒரு சில தலைவர்களை மறைத்து வைத்துவிட்டு சஜித் பிரேமதாச அமுலாக்கி வருகின்ற விதத்திலான அரசியலில் நாங்கள் ஈடுபடப்போவதில்லை. இந்த தீர்வினை பெற்றுக்கொள்வதில் தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டியது அத்தியாவசியம். அந்த நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நீங்கள் வழங்கும் செய்தி என்ன?
பதில்: ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக நான் குறிப்பாக தமிழ்பேசும் மக்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், பொதுவில் நாடு பூராவிலும் சமூக மாற்றமொன்றுக்கான கருத்து நிலவுகின்றது. இது நீண்டகாலமாக வளர்ந்து வந்ததொன்றாகும். இந்த சமூக மாற்றம் பல்வேறு படிமுறைகளில், பல்வேறு காலகட்டங்களில், பலவிதமாக வெளிப்பட்டது. எந்த வகையிலான கோரிக்கைகள் முன்வந்தாலும் இந்த மாற்றத்தை யதார்த்தமாக மாற்றிக்கொள்ள இயலாமல் போய் விட்டது.
இந்த மாற்றத்தை யதார்த்த பூர்வமானதாக மாற்றிக்கொள்ள தற்போது எமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் உங்கள் பிரதிநிதிகள் பற்றி தனிவேறாக சிந்தித்துப்பார்க்க முடியும்.
எனினும் இந்த தேர்தலில் கட்டாயமாக மக்கள் மத்தியிலிருந்து எழுந்துவந்து கொண்டிருக்கின்ற மாபெரும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு ஈடேறத்தக்க வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வாக்குகளை அளிப்பார்களென்ற தீவிரமான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. எம்மனைவரதும் கூட்டுச் சேர்க்கையின் மாற்றமாக இந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வோம் என்ற கோரிக்கையை தமிழ்

