News

வாக்குரிமையை மிகச்சரியாக பயன்படுத்தவது எப்படி?

By : முஹம்மத் பகீஹுத்தீன்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தாய் நாட்டின் நலன்களுக்காக உழைப்பதும் பாடுபடுவதும் ஒரு தவிர்க்க முடியாத வணக்கமாகும்.

தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளிகளாக இருப்பது ஒவ்வொரு குடிமகன் மீதுமுள்ள தார்மீகக் கடமையாகும்.

ஒரு முஸ்லிம் சிறந்த நாகரீகத்தின் விழுமியங்களை பரப்புரை செய்வதை தனது வாழ்வியல் கடமையாகவே  கருதுவான்.

அந்த வகையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் தனது நாட்டின் அரசியல் வாழ்விலும் தேர்தல் வழிமுறைகளிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டால் அதுவே ஒரு சிறந்த, உயர்ந்த விழுமியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இரண்டு தீமைகளில் தாக்கம் குறைந்ததை தெரிவு செய்தல்‘ என்பது ஒரு சட்டவிதியாகும். இதே கருத்தை கொடுக்கும் இன்னும் பல சட்டவிதிகள் நிறையவே காணப்படுகிறன்றன.

இந்த சட்டவிதிகள்  அரசியல் செயற்பாட்டில் எமது வகிபாகம் எப்படி அமைய வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது.

நன்மை, நலன்கள் மாத்திரம் உள்ள ஒரு விடயத்தை தெரிவு செய்வது இலகுவானதே. தீமை மாத்திரம் உள்ள ஒன்றை தவிர்ந்து கொள்வதும் இலகுவானதே.

நன்மை தீமை இரண்டும் கலந்த அல்லது இரண்டு தீமைகைளில் பாதிப்பு குறைந்த தீமையை தெரிவு செய்வது என்ற நிலை வரும்போது சொந்த நலன் பாராது ஷரீஆவின் நிலைக்களனில் நின்று குறைந்த பாதிப்பை தரும் தீமையை தெரிவு செய்வது ஆகுமானதே என இந்த சட்ட விதி கூறுகிறது.

எனவே பாராளுமன்றம் செல்வது அல்லது நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி ஒரு கட்சியுடன் கூட்டிணைவதும் அல்லது இரு வேட்பாளர்களில் இருவருமே பொருத்தமற்றவர் என்று கருதப்படும் போது ஒருவரை ஒப்பீட்டு ரீதியில் முற்படுத்தி தெரிவு செய்வதுவும் ஆகுமானதே என்ற கருத்தை இந்த விதி தருகிறது.

*’நலன்களை நிலை நிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது’ என்பது இன்னொரு முக்கியமான சட்டவிதியாகும்.*

சிறுபான்மையாக இருந்து அரசியல் போராட்டித்தில் கலந்து கொள்வதன் மூலம் தேச நலன்களையோ, சமூக மேம்பாட்டையோ அடைவது எப்படிப்போனாலும் கூர்மையடைந்துள்ள தீமைகளை குறைப்பது முதல் கட்ட தேவையாகும். எனவே கூர்மையடைந்துள்ள அதிகார வெறியை, அரசியல் சீர்கேடுகளை குறைப்பதற்காக தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது கண்டிப்பான தேவையாகும்.

இது நலன்களை பெறுவதை விட தீமைகளை தடுப்பது  முதன்மை படுத்தப்பட வேண்டும் என்ற அணுகுமுறையாகும். இந்த விதி நமது வாக்குரிமையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது.

இந்த விதிக்கு சீராவிலிருந்து ஒரு சான்றாக பின்வரும் சம்பவத்தை குறிப்பிடலாம்.

நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவை இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டிய அதே அடித்தளத்தில் மீண்டும் இடித்துக் கட்டுவதை மிகவும் விரும்பினார்கள். இருப்பினும் புதிதாக இஸ்லாத்தை தழுவியர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கஃபாவின் மீது வைத்துள்ள மதிப்பும் கண்ணியமும் மாசுபடும் என்ற கருதுகோளில் கஃபாவை புனர்நிர்மானம் செய்வதை நபிகளார் கைவிட்டு விட்டார்கள்.

கஃபதுல்லாவை ஆதியில் இருந்த அத்திவாரித்தில் கட்டுவது சர்வதேச உம்மத்துக்கான ஒரு பொது நலன். அதனால் உருவாகும் பித்னா அந்த நலனை மிகைத்துவிடும் தீங்காகும். எனவே தீங்கை தடுப்பதை இங்கு நபி (ஸல்) முதன்மை படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவம் புகாரியில் பதிவாகியுள்ளது.

எனவே எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் அரசியல் தீமைகளை தவிர்ந்து கொள்வதற்காக நமது வாக்குரிமையை பயன் படுத்துவது அல்லது சிவில் அரசியலில் ஈடுபடுவது கடமையாகும். நன்மைகள் கிடைக்காது என்றிருப்பினும் தீமைகள் குறைவதற்கு அது பயன்படுமே என்ற சிந்தனையே நாம் கருத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ சிவில் அரசியல் செயற்பாடு ஒரு சிறந்த ஆயுதமாகும்.

சிறுபான்மைக்கான அரசியல் போராட்டத்தில் வாக்குரிமை என்பதும் மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனமாகும். அதனை மிகச்சரியாக பயன்படுத்துவதற்கு இந்த சட்டவிதிகள் துணை நிற்கிறது.

தாய் நாட்டின் குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கு இடையிலான சௌஜன்யம், சமாதானம், பொருளாதார சுபீட்சம் போன்றவற்றை உருவாக்குவதற்கான தேர்தல் அரசியல் ஒரு சாத்வீக போராட்ட வழிமுறையாகும்.

இத்தகைய சிவில் அரசியல் செயற்பாட்டிக்காக ஒத்துழைப்பது நாட்டின் பெருந் தீமையொன்றை ஒழிப்பதற்கு செய்யும் உதவியாகும். நமது வாக்குரிமையை அத்தகைய மாற்றத்திற்காக பயன்படுத்துவது நிச்சயமாக ஒரு வணக்கமாகும்.

தூய எண்ணத்துடன் அது நடந்தால் கூலி நிச்சயம். அல்லாஹ் விளைவுகளை பார்த்து கூலி வழங்குவதில்லை. எண்ணத்திற்கே வெகுமதி தருகின்றான்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button