News

ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நீதி வழங்காது; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

சிறீலங்காவிற்கும் தமிழீழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் செயல்முறையில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது.

மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயற்பாட்டிற்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அவரது நேர்மையான, விரிவான அறிக்கைக்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. எவ்வாறாயினும், பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இன்மையால் ஈழத்தமிழ் மக்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்ட அறிக்கையில்,

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்கு சிறிலங்காவிற்கு மனித உரிமைப் பேரவையால் வழங்கும் இலவச அனுமதியின் தொடர்ச்சியாகும்.

மனித உரிமைகள் ஆணையத்தின் சிறிலங்கா மீதான மென்மையான நிலைப்பாடு, தண்டனையின்மையை மேலும் வலுப்படுத்துகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்பாக அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களின் கடந்தகால செயற்பாடுகள், சிங்களத் தலைமைகள் ஆதிக்கம் செலுத்தும் அரசாங்கத்தில் தமிழர்களுக்கான நீதி தொடர்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை திடசங்கமாக எடுத்துக் காட்டுகிறது.

2015 ஆம் ஆண்டில், சர்வதேச சமூகம் “நல்லாட்சியின்” கலங்கரை விளக்கமாகப் போற்றிய சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதில் கையொப்பமிட்டது. மார்ச் 2017 இல், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வருட கால நீடிப்பு வழங்கியது.

நவம்பர் 11, 2017 அன்று, “நல்லாட்சியின் ஆளுமை” ஜனாதிபதி, கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 350 உயர்மட்ட அரச இராணுவ அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்திம்போது.

போர்வீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இடமளிக்க மாட்டேன் என்றும் மேலும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளுக்கு உட்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

2019 இல், புதிய சிறிலங்கா ஜனாதிபதி பதவிக்கு வந்தார், அவர் UN HRCதீர்மானம் 30/1 இல் இருந்து சிறிலங்கா விலகுவதாக வெளிப்படையாகக் கூறினார். இருந்த போதிலும், மனித உரிமை ஆணையம் நீத்துப்போன தீர்மானத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தது.

புதிய சிங்கள ஜனாதிபதியின் செயற்பாடுகள் அவரும் வேறுபட்டிருக்க மாட்டார் என்பதை நிரூபித்துள்ளது. சிறிலங்கா, புதிய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மீது முன்னெச்சரிக்கையான தாக்குதலை தொடுத்து பேரவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரித்தது, ஆயினும் தீர்மானம், அடுத்த நாளே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை சர்வதேச சமூகத்திடம் இருந்து சிறிலங்கா மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதையே எடுத்துக்காட்டுகிறது. புதிய ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனது அரசியல் கட்சி “உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க முயலாது” என்று கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் இந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த தனது அறிக்கையில், “காத்திரமான முன்னேற்றத்திற்கான அடிப்படை அட்டூழியக் குற்அங்களிற்கான பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்வதாகும்.”

“இன்றுவரை, மோதலின் போது ஏற்பட்ட அட்டூழியக் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை”என்றும் குறிப்பிட்டார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு இழைத்த இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றை இந்றுவரை புதிய ஜனாதிபதி உட்பட எந்த ஒரு சிறிலங்கா ஜனாதிபதியும் ஒப்புக்கொள்ளவும் இல்லை அல்லது அதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை.

தனது கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடந்தகால வன்முறைக் கிளர்ச்சிகளுக்காக புதிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அரசின் அட்டூழியக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் பற்றிய எந்தக் குறிப்பும் புதிய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.

கொழும்பில் ஈழத்தமிழ் மாணவர்கள் 11 பேர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் அட்மிரல் சிறிமேவன் சரத்சந்திர ரணசிங்கவை துறைமுக நிர்வாகத்தின் அதிபராகவும், போர்க்குற்றவாளி சம்பத் துயகொண்டாவை பாதுகாப்பு செயலாளராகவும் புதிய ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இந் நியமனங்கள் புதிய நிர்வாகம் பொறுப்புக்கூறல் விடயத்தில், பழைய நிர்வாகத்தின் தொடர்ச்சியாக உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உட்பட ஏழு விசாரணைகளை மீள ஆரம்பிக்கப் போவதாக புதிய ஜனாதிபதி கூறுகின்றார் – இந்த வழக்குகளில் சிங்கள ஆயுதப் படைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் வழக்கு எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யதார்த்தம் என்னவென்றால், சிங்கள அரசியலில் இனவாதம் வேரூன்றி உள்ளதே என்பதாகும். சிங்கள அரசியல் கலாச்சாரம் ஈழத் தமிழர்களுக்கான நீதியை ஒருபோதும் அனுமதிக்காது Oakland Institute தனது 2021 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சிறிலங்கா ஒரு இனவாத அரசு.

மறைந்த அன்னை தெரசா சிறிலங்காவின் ஜனாதிபதியானாலும், சிங்கள இனவாதம், சிங்கள அரசியல் கலாச்சாரம், ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கவிடாது. சிறிலங்காவின் இனப்பிரச்சனை தனிநபர்களுக்கு அப்பாற்பட்டது-அது கட்டமைப்பு ரீதியானது.

சமீபகாலமாக, உள்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று உலக சமூகத்திற்கும் அதன் நிறுவனங்களுக்கும் (ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் தனது அறிக்கையில், போர்க்குற்றவாளிகள் என்று நம்பத்தகுந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராகஇ சொத்து முடக்கம், பயணத் தடைகள் மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவும், விரிவுபடுத்தவும் பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகருக்கு உரிய மரியாதையுடன் அவரது மேற்கூறிய பரிந்துரைகள் காத்திரமான செயற்திறன் அற்றவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

ரஷ்ய பணமுதலைகளைப்போல், சிறிலங்காவில் இருந்து போர்க்குற்றவாளிகள்இ இன அழிப்பாளிகள் விடுமுறைக்காக மேற்கு நாடுகளுக்கு அடிக்கடி செல்வதும் இல்லை, அல்லது மேற்கத்திய நாட்டு வங்கிகளில் சொத்துக்களை வைத்திருப்பதும் இல்லை. மேலும்.

அவர்கள் வெளிநாடுகளுக்குள் நுழையும்போது, அவர்களைக் கைது செய்வதற்கான பொறிமுறையும் இல்லை. அரிதான சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது, சவேந்திர சில்வா (அப்போது ஐ.நா. பிரதிநிதி) மற்றும் மகிந்த ராஜபக்ச (அப்போது சிறிலங்கா ஜனாதிபதி) போன்றவர்கள் நீதியைத் தவிர்ப்பதற்காக இராஜதந்திர விலக்கு(diplomatic immunity / அரசின் தலைவர் விலக்கு (head-of-state immunity)ஆகிய சட்டக்கோட்பாடுகள் கேடயங்களாக பாவிக்கப்பட்டன.

உயர் ஸ்தானிகரின் அறிக்கை மேலும் ஐ.நா பாதுகாப்பு சபையின் முலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (I.C.C)பாரப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது எனவும் குறிப்பிடுகிறது.

அத்தகைய முயற்சி ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்கப்படலாம் என்ற கருத்து சில தரப்புகளில் உள்ளது. சூடானுடன் நெருங்கிய அரசியல் பொருளாதார உறவைக் கொண்டிருந்த சீனா தன்னுடைய வீடடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சூடானை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தியதை தடுக்கவில்லை என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

அட்டூழியக் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் முயற்சியை பாதுகப்புச் சபையில் உள்ள எந்தவொரு நாடும். தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க முயன்றால் அந் நாடு சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாகும்.

மேலும் அந் நாட்டின் மதிப்பையையும், நற்பெயரையும் வெகுவாகப் பாதிக்கும்,பெரும் வல்லரசுகளின் உலகளாவிய செல்வாக்கிற்கான தற்போதைய போட்டியைக் கருத்தில் கொள்ளும்போது அவர்கள் சிறிலங்கா இனப்படுகொலையாளர்களையும் போர்க்குற்றவாளிகளையும் பாதுகாக்க தங்கள் செல்வாக்கை தியாகம் செய்ய வாய்ப்பில்லை என்பதே யதார்த்தமாகும்.

இறுதியாக, உயர் ஸ்தானிகரின் அறிக்கை சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில்((ICJ) சட்ட நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள பரிந்துரை செய்கின்றது. சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளை எந்த ஒரு நாடும் வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியாது.

இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட உறுப்பு நாடுகளை சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மேற்கூறிய நடவடிக்கைகள் பொறுப்புக்கூறலுக்கு வழி வகுக்கும் மற்றும் சிறிலங்காவில் வேரூன்றியிருக்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிறது. என்றுள்ளது.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker