இலங்கைக்கு ஏன் முன்பு எப்போதும் இருந்ததை விட வலுவான பாராளுமன்றம் தேவை?
சில வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க, நீடித்த மாற்றத்துக்கான பெரும் எதிர்பார்ப்புகளுடன் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு ஜனாதிபதியால் மட்டும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.
நாம் உண்மையில் நாட்டின் முன்னேற்றத்தைக் காண விரும்பினால், ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவான பலமான பாராளுமன்றத்தை கட்டியெழுப்ப எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் அவரது தொலை நோக்கான, “வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ கட்டியெழுப்ப முடியும்.
இது பாராளுமன்ற ஆசனங்களை நிரப்புவது மட்டும் இல்லை; விவேகமான தீர்மானங்களை எடுக்கவும், வேகமாக செயல்படவும் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதாகும்.
இலங்கை ஒரு திருப்புமுனையான காலப்பகுதியில் இருக்கின்ற வேளை, கடந்த காலத்திலிருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால், ஜனாதிபதியுடன் கைகோர்த்துச் செயற்படும் பாராளுமன்றமே எமக்குத் தேவை.
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இப்போது தீர்க்கமான நடவடிக்கை அவசியமாகிறது. முன்னெப்போதையும் விட இப்போது, ஒவ்வொரு முடிவிலும் ஜனாதிபதியுடன் தொடர்ந்து மோதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் திட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கும் நாடாளுமன்றம் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
*அழகிய வாழ்க்கைக்கான ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு*
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டத்தை ஜனாதிபதி அநுர முன்வைத்துள்ளார். அவரது பார்வை இ மற்றலட்சியம் நிறைந்தது. இந்த தருணத்தில் அவரிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதும் கடினமான காரியங்களை செய்து முடிக்கும் அதே இலட்சியத்தை தான்.
அவரது பார்வையை நனவாக்க, அவரது கொள்கைகளை ஆதரிக்கத் தயாராக உள்ள நாடாளுமன்றமே தேவை தவிர முன்னேற்றத்தைத் தடுக்கும் பிளவுபட்ட சபை அல்ல.
கட்சி தகராறுகளை நாங்கள் அனுமதித்தால், இழந்த நேரத்திற்கு மட்டுமல்ல, தவறவிட்ட உண்மையான முன்னேற்றத்திற்கும் விலை கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் நிறைவேற்றப்பட்ட சில சட்ட திட்டங்கள் போலவே எமது அபிவிருத்திக்கு பின்னடைவை ஏற்படுத்திய உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நிறையவே உள்ளன. கடந்த கால நிர்வாகங்கள் நமது பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்தும், நமது ஜனநாயக விழுமியங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒப்பந்தங்களைச் செய்தன. ஜனாதிபதி அனுர திஸாநாயக்க இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார், ஆனால் அதை திறம்பட செய்ய வேண்டுமானால் அவருக்கு பக்க பலமாக நிற்கும் ஒரு பாராளுமன்றம் அவசியமாகும்.
இத்தகைய அரசாங்கமொன்றிற்கு, இந்தத் தீங்கான கொள்கைகளை மாற்றியமைக்கவும், நமது நாட்டின் அத்தியாவசியங்களைப் பாதுகாக்கவும், நமது சுயாதீனத்தை மீட்டெடுக்க அவசியமான வலுவான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது நிறுவனங்களிடம் முன்வைக்கவும் அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.
*அதே பழைய பிணைப்புகளுடன் தான் நாம் பயணிப்பதா?*
தெளிவாக கூறினால், இது எதிர்க்கட்சிகளை மெளனிக்க செய்வதற்கானது அல்ல – இது இலங்கைக்கு சிறந்த மற்றும் உண்மையான தலைவர்களை தெரிவு செய்யும் காலத்தின் தேவை தொடர்பானதாகும். ஜனாதிபதியை ஆதரிக்கும் பாராளுமன்றம் என்பது எல்லாவற்றையும் ரப்பர் ஸ்டாம்பிங் செய்வதல்ல; இது மக்களின் தேவைகள் மற்றும் ஜனாதிபதியின் தொலைநோக்கு பார்வைக்கு ஒத்துப்போகும் கொள்கைகளை ஆதரிப்பதாகும். வலுவான எதிர்க்கட்சிக்கு அதிகாரம் உண்டு ஆனால் அது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க முடியாது. நாடாளுமன்றை வெறும் அரசியல் ஆதாயத்துக்காக அல்லது பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் அரசியல்வாதிகளை நாம் ஏராளமாக பார்த்திருக்கிறோம். அச் சக்கரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.
நம் நாட்டின் மீட்சிக்கான பாதை எளிதானது அல்ல. ஆனால் அதற்காக ஒன்றுபட்ட அணுகுமுறையே நமது சிறந்த எதிர்பார்ப்பாகும். எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் பங்கின் அளவு அதிகமாக இருந்தாலும், இந்தத் தேர்தலில் நாம் எடுக்கும் தேர்வுகளே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.
எமக்கு அவசியமாவது ஜனாதிபதி அநுரவின் “வளமான நாடு-அழகான வாழ்க்கை” என்ற திட்டத்தை ஆதரிக்கும் பாராளுமன்றமா? இல்லையெனில் எமக்கு அவசியமாவது முடிவற்ற தடைகளும் தவறவிட்ட வாய்ப்புகள் நிறைந்த பாதையில் பயணிக்க வேண்டுமா?
*எங்களுக்கு தேவை அழகான வாழ்க்கை*
இம்முறை ஜனாதிபதிக்கு எதிராக அல்லாது ஜனாதிபதியோடு செயற்படுவதற்கு தயாரான நாடாளுமன்றத்தை நியமிக்கும் அதிகாரம் எமக்கு கிடைத்துள்ளது. காலாவதியான சட்டங்களை நீக்குவதற்கும், தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்கும், இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு முதலிடம் கொடுக்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அர்ப்பணிக்கும் தலைவருக்கு இம்முறை நாம் ஆதரவளிக்க வேண்டும்.
பழைய கட்சி பிணைப்புகளை விடுத்து மக்களுக்கு உண்மையாக சேவையாற்றும் அரசாங்கத்தை அமைப்பதில் கவனம் செலுத்துவது இந்த தருணத்தில் எமது கடமையாகும்.
அரசியலை விட நாட்டின் முன்னேற்றத்திற்கு மதிப்பளிக்கும், இலங்கையின் வளர்ச்சிக்கான சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய நாடாளுமன்றத்தை உருவாக்குவோம்.
ஜனாதிபதி அநுரவின் தொலைநோக்கு பார்வைக்கு இணங்கும் சபையொன்றை தெரிவு செய்து எமது நாட்டின் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், உண்மையிலேயே இலங்கையை வளமான நாடாக மாற்ற முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அழகான வாழ்க்கையை உரிமையாக்கி, நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையான நாட்டை உருவாக்க முடியும். நாம் அவ்வாய்ப்பை இம்முறையும் மீண்டும் தவறவிட்டால், மீள் கொடுக்க வேண்டிய விலை அதிகம் என்பதை மனதில் கொள்வோமாக.
Shantha Jayarathna©️
தமிழாக்கம்:- நாசிக்
07.11.2024