News

சதிகார அரசியலில் ஈடுபட்டு வருபவர்களை நிராகரித்து மக்கள் இம்முறை தக்க பாடம் புகட்டுவார்கள் என வேலுகுமார் தெரிவிப்பு

வரலாற்றில் முதன்முறையாக கண்டி மாவட்டத்தில் இரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்காக சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கு கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் என்று புதிய ஜனநாயக முன்னணியின் கண்டி மாவட்ட தமிழ் தலைமை வேட்பாளர் வேலுகுமார் தெரிவித்தார்.

எனவே, இந்த வரலாற்று சந்தர்ப்பத்தை தமிழர்களிடமிருந்து பறிப்பதற்கு சதிகார அரசியலில் ஈடுபட்டுவரும் தரப்புகளுக்கு, அவர்களை நிராகரித்து மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் வேலுகுமார் கூறினார். 

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக 2015இல் நான் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து மக்கள் ஆதரவுடன் சபைக்கு சென்றேன். அதன் பின்னர் கண்டி மாவட்ட பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதற்கு உள்ளக சதிகள் இடம்பெற்றன.

இதன் ஓர் அங்கமாக சேறு பூசும் அரசியல்கள் முன்னெடுக்கப்பட்டன.

அப்படியிருந்தும் இரண்டாவது முறையும் மக்கள் என்னை சபைக்கு அனுப்பினார்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் ஆளுமையுள்ள ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதால் எனக்கு மீண்டும் ஆணை வழங்கினர்.

இதன் மூலம் கண்டி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரு தவணைகள் தமிழ் எம்.பியாக செயற்பட்ட அரசியல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்முறையும் சேறுபூசல்கள் இடம்பெற்றன. கூலிப்படைகளை குத்தகைக்கு எடுத்து வதந்திகள் பரப்பப்பட்டன. அவை அனைத்தும் பொய் என்பது நீதிமன்றம் மூலம் கூட நிரூபனமானது. தற்போது மக்கள் மத்தியில் பேராதரவு பெருகி வருகிறது.

புதிய வேட்பாளராக பிரசாத் குமாரை சிலிண்டர் கூட்டணியில் போட்டியிட வைத்துள்ளேன். இதன் மூலம் கண்டி மாவட்டத்தில் முதன்முறையாக இரு தமிழ் வேட்பாளர்களை சபைக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த வாய்ப்பை தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிலிண்டர் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்துவது போல இரு பிரதிநிதிகளை வென்றெடுக்கலாம் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button