இலங்கையின் 6வது சர்வதேச விமான நிலையம் தயாராகிறது – அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பமானது
ஹிங்குராங்கொட விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்தித் திட்டம் இன்று விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஹிங்குராக்கொட விமான நிலையம் இலங்கையின் 6வது சர்வதேச விமான நிலையமாக அமைய உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், ஹிங்குராங்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு, விமான நிலையத்திற்கான மாஸ்டர் பிளான் மற்றும் இதர பணிகளை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி, அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.
அப்போது, ஹிங்குராங்கொட விமான நிலையம் தற்போது சிறிலங்கா விமானப்படையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாகவும், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நியமங்களுக்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
அதன்படி, இலங்கை விமானப்படை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விமான நிலையத்திற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டது.
மேற்படி குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக ஹிங்குராங்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.