பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடமைப்புத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக்கொள்ள 35 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவதற்காக முன்னாள் எம்.பி.க்கள் ஒப்படைத்த 25-30 வீடுகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, முன்னுரிமை அடிப்படையில் புதிய எம்.பி.க்களுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லங்கள் பின்னர் ஒதுக்கப்படும்.
மொத்தமுள்ள 108 உத்தியோகபூர்வ இல்லங்களில், 80 ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகவும், 28 எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்து 40 கிலோமீற்றர்களுக்கு மேல் வீடுகள் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் உத்தியோகபூர்வ இல்லங்களைக் கோர முடியும் என குஷானி ரோஹனதீர மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் முதலாவது பாராளுமன்ற வாரம் டிசம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.