மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலவந்தமாக தடுத்து வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட குற்றங்களை செய்த நபருக்கு 30 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலவந்தமாக தடுத்து வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தினார் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிமன்ற நவரத்ன மாரசிங்க, 30 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, வியாழக்கிழமை (12) தீர்ப்பளித்தார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 37 வயதான நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய தாய், சகோதரி மற்றும் மனைவிக்கு மரியாதை கொடுப்பது போல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் சமுதாயத்தில் உள்ளவர்கள் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்கும் போது, இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நீதிமன்றத்தில் மன்னிப்பு இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
ஒரு குற்றச்சாட்டுக்கு 10 வருடங்கள் என்ற அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு 30 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நான்கரை லட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டார். அத்துடன், 45 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.