News

உலமா சபையால் பறிக்கப்பட்டிருக்கும் எமது உரிமைகளை ஜனாதிபதி அனுர குமார பெற்றுத் தருவார் என்று நாம் நம்பியுள்ளோம் ; மௌலவீ அப்துர் றஊப்

உலமா சபையால் பறிக்கப்பட்டிருக்கும் எமது உரிமைகளை ஜனாதிபதி அனுர குமார பெற்றுத் தருவார் என்று நாம் நம்பியுள்ளோம் என மௌலவீ அப்துர் றஊப் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“உலமா சபை ஸூபிஸத்தின் எதார்த்தத்தை அறிந்து கொள்வதாயின் இன்னும் சில வருடங்கள் தேவை!

“பத்வா” எனும் சிலந்தி வலை பொது மக்கள் ஸூபிஸ ஞானத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக உலமா சபை பின்னிய வலையாகும்!

ஜனாதிபதி அநுர அவர்களின் ஆட்சி மலர்ந்த பின்புதான் இலங்கைத் திரு நாடு பாரபட்சம் காட்டாத, இலஞ்ச ஊழல் செய்யாத, மத, மனித உரிமை மீறாத நாடு என்பது மக்களால் உணரப்படுகிறது.

இவ் இலங்கைத் திரு நாடு ஜனநாயக நாடென்று உலமா சபை அறிந்திருந்தும் கூட, இந்நாட்டில் எவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எக் கொள்கையிலும் இருக்கலாம் என்பதையும் அறிந்திருந்தும் கூட அவற்றைக் கவனத்திற் கொள்ளாது ஸூபிஸ தத்துவம், இறையியல் ஞானம் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்தைச் சரி கண்டு ஏற்றுக் கொண்ட ஸூபிஸ முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கி, எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்று எழுத்து மூலம் அறிவித்தது இந்நாட்டுச் சட்டத்திற்கே முரணானதாகும்.

இந்நிகழ்வு 1979ம் ஆண்டு நடந்ததாகும். சுமார் 45 வருடங்கள் ஸூபிஸ முஸ்லிம்கள் மத உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பிட்ட சோதனைக் காலத்தில் இலங்கைத் திரு நாட்டை மாறிமாறி எட்டு ஜனாதிபதிகள் ஆட்சி செய்துள்ளார்கள். அவர்கள் அனைவரின் கவனத்திற்கும் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டிருந்தும் கூட அவர்களில் எவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் காத்தான்குடியிலிருந்து கொழும்புக்குப் பல முறை வந்து போனதும், பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்ததுமே மிச்சம். ஒரு பலனும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாபதி கோட்டாபய எங்களைச் சந்திப்பதற்கு நேரம் தந்தும் கூட அவர் சொன்னபடி எங்களைச் சந்திக்கவில்லை.

கொரோனா நோய் பரவியிருந்த காலம், நேரம் பார்க்காமல் நாங்கள் ஒரு குழு அவரைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு ஒரு நாள் காலை 10 மணிக்குச் சென்று இரவு 08.30 வரை காத்திருந்தோம். இறுதியில் ஜனாதிபதிக்கு நேரமில்லை என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

ஒரு நாட்டின் ஜனாதிபதி அந்நாட்டு மக்களை இவ்வாறு ஏமாற்றுவது மனிதாபிமானமாகுமா?

கொளரவ ரணில் ஐயா அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் அவரைச் சந்திக்கச் சென்ற ரிஸ்வி முப்தியிடம் ஜனாதிபதி அவர்கள் (காத்தான்குடி றஊப் மௌலவீ அவர்களுக்கு “பத்வா” கொடுத்தீர்களே! அது என்னவாகிற்று?) என்று கேட்ட போது (அவர் எல்லாவற்றையும் அல்லாஹ் என்று சொல்கிறார்) என்று பதில் கூறினார். அவ்வளவுதான்.

எனவே, கடந்த எட்டு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலத்தில் எமது பிரச்சினைக்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை.

கௌரவ ஜனாதிபதி அநுர அவர்கள் இந்நாட்டிலுள்ள சட்ட விரோதச் செயல்கள் அனைத்தையும் நிறுத்தி, நீதி, நேர்மை என்ற அடிப்படையில் நாட்டை ஆள்வதற்கும், இலங்கை வாழும் மக்கள் அனைவருக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் அவர்களின் உரிமைகளை வழங்கி நியாயமான ஆட்சி செய்து நாட்டை முன்னேற்றத் துணிந்துள்ள இவ்வேளை உலமா சபையால் பறிக்கப்பட்டிருக்கும் எமது உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்று நாங்கள் நம்பியுள்ளோம் என்பதை பொது மக்கள் அனைவருக்கும் அறியத் தருகிறோம்.”

என குறிப்பிட்டுள்ளார்

Recent Articles

Back to top button