அப்போ இவரு உண்மையான எஞ்சினியர் இல்லையா? கோசல ஜயவீர MP யின் கல்வித் தகைமைகள் தொடர்பிலும் சர்ச்சை

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோசல நுவன் ஜயவீரவின் கல்வித் தகைமைகள் தொடர்பிலும் ஊடகங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
‘பொறியியலாளர் கோசல ஜயவீர’ என பிரசார சுவரொட்டிகளைக் காட்டி கேகாலையில் போட்டியிட்ட அவர், பொதுத் தேர்தலில் 61,713 விருப்பு வாக்குகளைப் பெற்று கேகாலையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஏழு திசைகாட்டி உறுப்பினர்களில் இரண்டாவது இடம்பிடித்தார்.
பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது, அவர் தன்னை ஒரு பொறியியலாளர் என்று விளம்பரம் செய்து, தனது சுயவிபரத்தை பின்வருமாறு வெளியிட்டிருந்தார்.
“குருகலை கனிஷ்ட கல்லூரியிலும் எஹலிய கொட மத்திய கல்லூரியிலும் பாடசாலைக் கல்வியை முடித்து திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் உயர்க்கல்வியை கற்று திறந்த பல்கலைக்கழக பொது மாணவர் சங்கத்தின் தலைவராக கடமையாற்றி சோசலிஷக் கட்சியின் மாணவர் சங்கத்திலிருந்து (SSU) தேசிய அரசியலில் பிரவேசித்த சகோதரர் கோசல’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
திறந்த பல்கலைக்கழகத்தில் எந்தப் பொறியியல் படிப்பைப் படித்தார் என்பது தெரியவில்லை.
பாராளுமன்ற இணையத்தளத்தில் டிப்ளோமா பெற்றவர் என்றும் உதவிப் பொறியியலாளர் என்றும் தொழில் தகுதியாகப் பட்டியலிட்டாலும், அவர் பெயருக்கு முன்னால் பொறியியலாளர் என்ற பட்டத்தை எழுதும் அளவுக்கு பட்டம் பெற்றிருக்கவில்லை என்று தெரிகிறது.
பொறியியலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களும் தற்போது அவரது சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து மறைந்துவிட்டன.
இதேவேளை தகவல், தொழில்நுட்ப பொறியிய லாளர் என்று விளம்பரப்படுத்தி கண்டியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற தனுர திசாநாயக்க பாராளுமன்ற இணையத்தில் தொழில் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அதற்கு வேறு என்ற பதிலை அவர் குறிப்பிட் டுள்ளார்

