News

ருமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்று தருவதாக ஒரு கோடியே 92 லட்சம் பணத்தை பெற்று  மோசடியில் ஈடுபட்டு வந்த மூதூரைச் சேர்ந்த இளைஞன் கைது

மட்டக்களப்பில் ருமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை பெற்று தருவதாக தலா 16 இலட்சம் ரூபாயாக 12 பேரிடம் ஒரு கோடியே 92 லட்சம் பணத்தை பெற்று  மோசடியில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு முகவர் நிலைய உரிமையாளரான மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் (3) கைது செய்யப்பட்டுள்ளார்.  

இது தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய உரிமையாளர் முகநூல் ஊடாக ருமேனியா, போலாந்து, சோபியா போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பலர் நேரடியாக குறித்த முகவர் நிலையத்துக்கு சென்று விண்ணப்படிவங்களை நிரப்பி கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மற்றும் பொலிஸ் நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 12 பேர் தலா 16 லட்சம் ரூபாய் பணத்தை 2023ம் ஆண்டில் வழங்கியுள்ளனர்.

பின்னர்  அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது நீண்டகாலமாக இழுத்தடித்து வந்துள்ள நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட நிலையில் அதனை வழங்காததையடுத்து அவருக்கு எதிராக சிலர் மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பில் உள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளர் கபில கருணாரத்தின தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை (03) பகல் குறித்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்படாமல் போலியாக இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன்   ருமேனியா, போலாந்து, சோபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 பையில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது  கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த முகவர் நிலையம் தொடர்பாக முகநூல் விளம்பரத்தை பார்த்து  வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா. மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 க்கும் மேற்பட்டவர்கள் தலா 16 லட்சம் தொடக்கம் 20 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கனகராசா சரவணன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button