பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் மூன்று விமானங்கள் “கடுமையான” சேதம்

டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில், ஏவுகணை சிதறல்கள் தாக்கியதில் மூன்று தனியார் விமானங்கள் “கடுமையான” சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தபோது, அவற்றின் பாகங்கள் சிதறி விழுந்ததில் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஒரு விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும், மற்ற இரண்டு விமானங்கள் கணிசமான சேதத்தைச் சந்தித்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, பென் குரியன் விமான நிலையம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதுடன், வணிகரீதியான விமானப் போக்குவரத்துகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இந்த விமான நிலையம் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான மையமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



