News

இம்ரான்கானை இலங்கைக்கு வரவழைத்து ஜனாஸா எரிப்பை தடுத்து நிறுத்தியது நாங்கள்தான் ; ஹரீஸ் எம். பி

நூருல் ஹுதா உமர்

கொடுங்கோல் ஆட்சி செய்த கோத்தாவினுடைய குகைக்குள் காலை 10 மணிக்கு சிங்கமாகச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எங்களுடைய இந்த முஸ்லிம்களை பற்ற வைக்கின்றீர்கள், சாம்பலாக்குகின்றீர்கள். உங்களுக்கு கொடுக்கின்ற அவகாசம் இன்னும் பத்து மணித்தியாலங்கள் நான் வந்த விமானம் இன்னும் பத்து மணித்தியாலத்தில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் உலகில் உள்ள 54 முஸ்லிம் நாடுகளையும் ஒன்று திரட்டி உங்களை உலகின் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை- இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அன்று கொரோனாவால் சிக்கிய முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்ட போது நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தி உரிமைக்காக ஏங்கி நின்றோம். மரணமானவர்களின் குடும்பங்கள் தனது மரணித்த உறவினரின் சாம்பல் தான் வீட்டுக்கு வரப்போகிறது என்று கவலையில் இருந்த போது கொடுங்கோல் ஆட்சி செய்தவர்களோடு நாங்கள் பேசியதுடன் மன்றாடினோம். அவர்கள் மறுத்த போது இந்த ஜனாஸாக்கள் எரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களையே அடமானம் வைத்து பல்வேறு வேலைத் திட்டங்களில் இறங்கி பணியாற்றினோம்.

அதனொரு கட்டமாக தான் எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அனைவரையும் பாகிஸ்தான் தூதுவராலயத்திற்கு அழைத்துச் சென்றோம். எங்களுக்கு உதவி கரங்கள் கொடுங்கள் என்று அவர்களிடம் கேட்டோம். கவலைப்பட வேண்டாம் என்று கூறி இலங்கைக்கு வந்து இந்த பிரச்சினையை தீர்ப்போம் என அன்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எமக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆனாலும் எமக்கு பக்கத்தில் இருக்கும் பெரிய நாடுகள் எதுவும் இந்த ஜனாஸா எரிப்பை நிறுத்த எமக்கு ஆதரவாக வரவில்லை என்பது வேதனையான விடயம்.

பாகிஸ்தான் பிரதமர் குறுகிய விஜயமாக இலங்கை வந்து இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்து அந்த வாக்குறுதிக்கு ஏற்ப பிரதமர் இம்ரான்கான் அவர்கள் இலங்கைக்கு வந்தது கொடுங்கோல் ஆட்சி செய்த கோத்தாவினுடைய அந்த குகைக்குள் சிங்கமாகச் சென்று காலையில் 10:00 மணிக்கு சந்தித்தபோது எங்களுடைய இந்த முஸ்லிம்களை பற்ற வைக்கின்றீர்கள், சாம்பலாக்குகின்றீர்கள். உங்களுக்கு கொடுக்கின்ற அவகாசம் இன்னும் பத்து மணித்தியாலங்கள் நான் வந்த விமானம் இன்னும் பத்து மணித்தியாலத்தில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் உலகில் உள்ள 54 நாடுகளையும் ஒன்று திரட்டி உங்களை உலகின் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்துவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் இம்ரான்கான் எங்களை நேரடியாக சங்கரில்லா ஹோட்டலில் மூன்று மணிக்கு சந்தித்தார். ஒரு மார்க்கப்பற்றுள்ள தலைவராக பெருந்தலைவர் அஸ்ரப் இருந்தாரோ அதேபோன்று அன்று தஸ்பமணிவுடன் சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் என்று சொல்லி எங்களுடன் பிரதமர் இம்ரான்கான் பேச ஆரம்பித்தார். இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங்களை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அங்கிருந்த எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் நாங்கள் அவரிடம் சொன்னோம். எங்கள் கதையைக் கேட்ட பின் அவர் கோத்தாவுடன் பேசிய விடயத்தை சொன்னார். நான் போவதற்கிடையில் ஒரு செய்தி வரும் என்று எண்ணுகின்றேன் என்று கூறி ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும் இப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருக்கின்ற அப்போதைய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் வந்து ஜனாஸா நல்லடக்கம் செய்ய அனுமதி ஜனாதிபதி தந்துவிட்டார் என்று கூறியதுடன் சுகாதார அமைச்சருக்கும் கட்டளையிடப்பட்டுள்ளது என்று சொன்னார். நாங்கள் எல்லோரும் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னோம். இதனால் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இலங்கையில் சந்தோஷத்தில் பெருமூச்சு விட்டார்கள். – என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button