“காஸாவை அமெரிக்கா கையகப்படுத்தும்” என்ற புதிய புவியரசியல் கற்பனை வியூகம் அபத்தமானது

சர்வதேச நீதிமன்றத்தினால் போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹுவை அமெரிக்காவிற்கு அழைத்தமை சர்வதேச சமூகத்தையும் சர்வதேச சட்டங்களையும் டொனால்ட் டிரம்ப் துச்சமாக கருதுவதற்கு போதிய சான்றாகும்.
அதேபோல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமது நேசநாடுகளை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு காஸா மக்கள் மீது இஸ்ரேல் திணித்த போரின் பின்புலத்தில் அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் இராணுவ இராஜதந்திர பொருளாதார உதவிகளை வழங்கியமை பகிரங்க இரகசியமுமாகும்.
டொனால்ட் டிரம்ப்பினது கடந்த ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்ட “மிலேனியம் டீல்” எனப்படும் வியூகத்தின் படி பலஸ்தீன் மக்களை சினாய் பாலைவனத்திற்கும் அண்டைய நாடுகளுக்கும் இடம் பெயறச் செய்வதும் காஸா பிரதேசத்தை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும் அவரது திட்டமாக இருந்தது.
பிராந்தியத்தில் எகிப்து ஜோர்டான் போன்ற நாடுகளுடனும் வளைகுடாவில் தமது நேச நாடுகளுடனும் நேரடி மறைமுக ஒத்துழைப்பு முதலீடுகளுடன் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் காஸா கரையோரப் பிரதேசங்களில் உள்ள சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் உள்ள மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கையகப்படுத்துவதே மிலேனியம் டீல் இனது பிரதான இலக்கு ஆகும்.
அவ்வாறு கையகப்படுத்தும் பெட்ரல் மற்றும் எரிவாயுவை காஸா ஹய்ஃபா துறைமுகமூடாகவும் குழாய்கள் மூலமும் ஐரோப்பிய சந்தைக்கு தருவதும் அவர்களது கூட்டு முயற்சியின் இலக்கு ஆகும்.
ஏக காலத்தில் ரஷ்யா உக்ரேனூடாக ஐரோப்பிய சந்தைக்கு எரிபொருளை தருவதனை தடுப்பதற்கான யுத்ததையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியிருந்தமை குறிப்பிடத் தக்கது, இந்த பிரதான மிலேனியம் கனவின் நகர்வுகளே சிரியா, லெபனான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்காவும் அதனது நேரடி மறைமுக நேச நாடுகளும் மேற் கொண்ட புவியரசியல் நகர்வுகளாகும்.
எகிப்தில் கவிழ்க்கப்பட்ட முஹம்மத் முர்ஸியின் நல்லாட்சி, துருக்கி கத்தார் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் ஐரோப்பிய எரிபொருள் எரிவாயு சந்தையில் கால் பதிப்பதனை தடுக்கும் நகர்வுகள் வளைகுடா காஸா சிரியா ஈராக் மைய புவியரசியலின் பின்புலத்தில் சுமார் ஒரு தசாப்த காலமாக இருந்து வருவதனை உலகம் அறியும்.
மத்திய கிழக்கின் நவகாலனிய லிபரல் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நேரடி மற்றும் புரொக்ஸி போர்கள் மூன்றாம் உலகப் போராகவே பார்க்கப்படும் அளவு பாரிய உயிர் உடமைகள் உட்கட்டமைப்புகள் பொருளாதாரங்கள் என பல அழிவுகளை கண்டிருக்கிறது.
ஆப்கான் மினரல் வளங்களை கையகப் படுத்துவதில், ஈராக் எண்ணெய் வளங்களை கையகப்படுத்துவதில், லிபியா மற்றும் வட ஆபிரிக்க வளங்களை சூறையாடுவதில் பாரிய பின்னடைவுகளை கண்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று பலஸ்தீன் காஸா மக்களிடம் மூக்குடைந்து நிற்கிறது.
குறிப்பாக ஹமாஸ் மற்றும் காஸா மக்கள் அத்தகையதொரு பாரிய மூன்றாம் உலகப் பேரழிவிற்கே முகம் கொடுத்தார்கள் என்பதுவும் ஒட்டு மொத்த மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளினதும் மக்களினதும் நலன்களையும் காப்பாற்றி இருக்கிறார்கள் என்றும் கூறினாலும் மிகையாகாது.
புவியரசியல் இராஜதந்திர நகர்வுகளில் தோற்றுப் போன மிலேனியம் டீல் இராணுவ நடவடிக்கைகளிலும் தோற்றுப் போன பின் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என டொனால்ட் டிரம்ப் காஸாவை அமெரிக்கா கையகப்படுத்தும் என ஒரு கற்பனை நிலைப்பாட்டை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
அது அபத்தமான நிலைப்பாடாக இருந்தாலும் அமெரிக்காவினதும் அதன் பிராந்திய கூட்டாளிகளினதும் அரசியல் இராஜதந்திர தலையீட்டை தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டமிட்ட வியூகமாகும்.
காஸா மக்களின் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, காஸா மற்றும்
பலஸ்தீன ஆட்சிக் கட்டமைப்பு, பாலஸ்தீன தேச உருவாக்கம், இஸ்ரேலின் போர்க் குற்றங்கள், சர்வதேச சமூக நகர்வுகள் ஒத்துழைப்புகள் போன்ற யதார்த்தமான களநிலவரங்களில் இருந்து கற்பனை வியூகங்களில் அமெரிக்க காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது, அதற்கான உளவியல் ஊடகப் போரை டிரம்ப் முடுக்கி விட்டுள்ளார்.
அத்தகைய கற்பனை வியூகத்தை மையமாக வைத்து அமெரிக்காவின் மத்தியகிழக்கு வளைகுடா மற்றும் மேலைத்தேய நேரடி மறைமுக நேச நாடுகளும் பலஸ்தீன் மக்களின் காவலர்களாக அறிக்கைகளை விட ஆரம்பித்துள்ளனர்.
கற்பனை வியூகங்களை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தை மேசைகளில் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவும் அரபு முஸ்லிம் உலக பொதுசன அபிப்பிராயத்தில் ஆதிக்கம் செலுத்தவும் முனைந்துள்ளார்கள்.
கத்தார், ஈரான், துருக்கி மற்றும் சில அரபு முஸ்லிம் நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளை, அவர்களது புவியரசியல் நலன்களை முடக்கி மீண்டும் தமது புவியரசியல் மேலான்மையை நிலைநிறுத்துவதும் இவ்வாறான பிரகடனங்களின் பிரதான இலக்குகளாகும்.
சத்தியம் ஒன்றே நிலையானது பொய்களை கட்டமைக்கும் சாம்ராஜ்யங்கள் சரிந்து வீழ்வதே சரித்திரமாகும், சத்தியம் வென்று அசத்தியம் அழிந்து ஒழிந்து போகும், அதுவே பிரபஞ்ச நியதியுமாகும்!
*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 07.02.2025 || SHARE
https://youtube.com/@inamullah-m?si=V9mrPlpbHaWN4DVx
www.inamullah.net

