News

ஸவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட  அல்குர்ஆன் பிரதிகள், தமிழ் தர்ஜமத் மஆனில் குர்ஆன் தொடர்பில் நேற்று இடப்பட்ட பதிவு தொடர்பாக அடுத்த பக்க நியாயங்கள்..

🇱🇰🇸🇦
*ஸவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட  அல்குர்ஆன் பிரதிகள், தமிழ் தர்ஜமத் மஆனில் குர்ஆன் தொடர்பில் நேற்று இடப்பட்ட பதிவு தொடர்பாக அடுத்த பக்க நியாயங்கள்..

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் நியமிக்கப் பட்ட உள்வரும் இஸ்லாமிய நூல்கள் ஆய்வுக் குழுவின் அனுமதி மறுப்பு காரணமாக துறைமுகத்தில் சில மாதங்களாக விடுவிக்கப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் 40 அடி நீளமுள்ள கொள்கலன் தொடர்பில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் பற்றி நேற்று ஒரு பதிவை இட்டிருந்தேன்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள  பதில் பணிப்பாளர் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு சில விளக்கங்களை தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களிற்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக உள்வரும்  இஸ்லாமிய சமயநூல்கள் குறித்த சட்டவரம்புகள் அமுலில் இருப்பதனை சுட்டிக் காட்டிய அவர்கள் மேற்படி குர்ஆன், தப்ஸீர் தர்ஜமா பிரதிகளை அன்பளிப்பு செய்தவர்கள் உரிய நடைமுறைகளை முறையாக பின்பற்றத் தவறியுள்ளதாக குறிப்பிட்டனர்.

முன்னாள் பணிப்பாளர்கள் ஜனாப் இப்ராஹீம் ஸாஹிப் அன்ஸார், மற்றும் ஜனாப் முஹம்மத் பைஸல் ஆகியோரிடம் வாய்மூல அனுமதியை பெற்றிருந்த போதும் உத்தியோகபூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நிறைவு பெறமுன்னர் கப்பலில்  முன்னாள் பணிப்பாளரது பெயர் குறிப்பிடப்பட்டு கொள்கலன் அனுப்பப்பட்டிருக்கிறது.

இது ஸவூதி அரசின் நன்கொடை அல்லாது தனிப்பட்ட நபர்களின் நன்கொடை என்பதால் அதுபற்றிய எந்த தலையீடும் ஸவூதி அரேபிய தூதரகத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா ஒரு நிறுவனமாக இந்த விடயத்தில் எந்த தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும்..

அதன் பிரதிநிதிகள் மற்றும் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகளைக் கொண்ட மீளாய்வுக்குழு தற்போது அமுலில் உள்ள சட்ட நியமங்களிற்குள் தமது தீர்மானங்களை மேற்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

அந்த நிபுணர்கள் குழு சமய கலாசார திணைக்களத்தை அமுலில் உள்ள விதிமுறைகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவற்றிற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பொறுப்புக்  கூறக் கடமைப்படுவதில்லை என்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள சில குரல்பதிவுகள் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா  மேற்படி இறுக்கமான பாகுபாடான நடைமுறைகள் தளர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உயர்மட்டங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முறையாக சமூகத் தலைமைகள் அணுகும் பட்சத்தில் மேற்படி விவகாரத்தில் அமைச்சரும் அதிகாரிகளும்  பாதுகாப்பு தரப்பினரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு குறிப்பிட்ட நன்கொடையை ஒருங்கிணைப்பு செய்த மேற்படி விவகாரத்தை ஊடகங்களுக்கு குரல்பதிவுகள் மூலம் தெரிவித்த சகோதரரும் தனது பதிவுகளை இனியும் பகிரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட  தரப்புகள் மற்றும் அதிகாரிகள் மேற்படி விவகாரத்தை சுமுகமாக முடிவிற்கு கொண்டு வரும் உத்தரவாதத்தை தந்துள்ளதாகவும் குரல்பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அதன்படி எனது அறிக்கையும் இன்று காலை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

திணைக்கள அதிகாரிகளும் விஷேட குழுக்களும் அமுலில் உள்ள சட்ட வரம்புகளை பின்பற்றிய போதும், பாகுபாடான இறுக்கமான நடைமுறைகள் கட்டாயமாக தளர்த்தப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல், சிவில், சன்மார்க்க தலைமைகள் கரிசனையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் வலியுறுத்த விரும்புகிறோம்.

அத்தோடு துறைமுகத்தில் உள்ள   அல்குர்ஆன் பிரதிகளை மாத்திரமன்றி தர்ஜமத் மஆனில் குர்ஆன், சிங்கள மொழி தப்ஸீர் என்பவற்றை திருப்பி அனுப்பாது விடுவித்து முஸ்லிம் விவகார திணைக்களத்தில் களஞ்சியப்படுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும் என்பதனையும் கூறிக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தினால் எமது சமூகத்திற்கோ, உலமாக்களுக்கோ  தேசத்திற்கோ ஸவூதி இலங்கை உறவுகளுக்கோ எத்தகைய அபகீர்த்தியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இரு கருத்து இருக்கமாட்டாது என நம்புகிறோம்.

குறிப்பு: மேற்படி விடயங்கள் தொடர்பிலான சகல ஆவணங்களும் குரல்பதிவுகளும் சம்பந்தப்பட்ட தரப்புகளால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 29.07.2024
ஸவூதி அரேபியா ஜித்தா நகரிற்கான முன்னாள் கொன்ஸல் ஜெனரல்.
முன்னாள் பொதுச் செயலாளர்- தேசிய ஷூரா சபை..

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button