அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் பேச்சுகளை நாம் கணக்கெடுப்பதில்லை என ஹமாஸ் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் பேச்சுகளைத் தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் இஸ்ரேல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய பணயக்கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் இவ்வாறு குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விடுதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் கூறினார்.
அவருடைய இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார்.
ட்ரம்பின் கருத்துகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கடினம் ஆக்குவதற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளதாகவும் அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி வலியுறுத்தியுள்ளார்.

