நீண்ட காலமாக பல்வேறு சமூக அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக செய்து வரும் Maradana Charity அமைப்பு உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்யப்பட்டது.

Maradana Charity அமைப்பு, பேருவளை பிரதேசத்தில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக சமூக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் சமூக அமைப்பாகும்.
அண்மையில் பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தில் Maradana Charity அமைப்பு உத்தியோகபூர்வமாக அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது..
Maradana Charity அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் பாச்சா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜாமிஆ நளீமிஆ இஸ்லாமிய கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷேக் ஏ.சி. அகர் முஹம்மத் பிரதம அதிதியாகவும், மற்றும் கௌரவ அதிதியாக தொழிலதிபர் அல்ஹாஜ் அஹ்ஸன் றிபாய் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு Maradana Charity அமைப்பின் இலட்சினையை அங்குரார்பணம் செய்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக மற்றும் மதத்தலைவர்கள், அறிஞர்கள், நன்கொடையாளர்கள், நலன் விரும்பிகள், தொழில் வல்லுநர்கள், மஸ்ஜித் தர்மகர்த்தாக்கள், பாடசாலை அதிபர்கள், சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பேருவளை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
“ஐக்கியத்துடன்கூடிய சமூக அபிவிருத்தியை நோக்கி” எனும் தொனிப்பொருளில் Maradana Charity அமைப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பேருவளை பிரதேசத்தில் அறிவுமயப்படுத்தப்பட்ட சமூகமொன்றை கட்டி எழுப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு பிரதேச பாடசாலைகளில் பல கல்வி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகள், பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் தொழில் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான புலமை பரிசில்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உளவள ஆலோசனை கருத்தரங்குகள், தொண்டர் ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குதல், விசேட மேலதிக நேர வகுப்புக்கள் போன்ற பல்வேறு கல்விசார் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும், இவற்றை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளை ஒரு வலையமைப்புக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் பொதுச் செயலாளர் ரூமி ஹாரிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார். மேலும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட ஜாமிஆ நளீமிஆ இஸ்லாமிய கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷேக் ஏ.சி. அகர் முஹம்மத் மற்றும் தொழிலதிபர் அல்ஹாஜ் அஹ்ஸன் றிபாய் ஆகியோர் Maradana Charity அமைப்பின் செயற்பாடுகளை பாராட்டியதோடு தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச பாடசாலை அதிபர்களான திரு. எஸ் குமார், ஜனாப் அப்துல் ரஹ்மான் மற்றும் திருமதி யஹ்யா பாரூக் ஆகியோர் தங்களது பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்களையும் இந்நிகழ்வில் முன் வைத்ததோடு அதற்கான தீர்வுகளை Maradana Charity அமைப்பிடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
கொரோனா மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பேருவளை பிரதேசத்தில் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை Maradana Charity அமைப்பு முன்னெடுத்ததோடு கொரோனா காலத்தில் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் விசேட கொரோனா பிரிவு ஒன்றை புனர்நிர்மாணம் செய்து கொடுத்ததோடு ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட போது பிரதேசத்தில் இலவச ஒக்சிஜன் விநியோகத்தையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





